பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/412

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

397


வாக்குக் கொடுப்பாயின், எங்கள் ஆட்சேபணையை மீட்டுக் கொள்ளுகிறோம்!” என்று கூறினார். அதன்மீது எனக்குக் கோபம் வந்து, ‘நான் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு தான் போவேன். நான் ஒருமுறை கூறிய மொழியினின்றும் தவறேன். வருவது வரட்டும், உம்மாலானதை, நீர் பாரும்!’ என்று பதில் கூறிவிட்டு விலகி வந்தேன். அதன்பேரில், ஏது, நம்முடைய ஜபம் சாயாது போலிருக்கிறது! என்று, அந்த ஆட்சேபணையை விட்டார். இந்நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறபடியால் இவர் பெயரை இங்கு நான் எழுத எனக்கிஷ்டமில்லை .

பிறகு அங்கு போய் வருவதற்கு ஆக்டர்களைச் சேர்க்கவேண்டிதாயிற்று. எங்கள் நிர்வாக சபையார் அவ்விடம் 5 நாடகங்களாவது கொடுத்தால்தான் செலவு கட்டிப்போகும் என்று தீர்மானித்தார்கள். அப்படித் தீர்மானிக்கப்பட்ட நாடகங்கள் : ‘லீலாவதி சுலோசனை, மனோஹரன், காலவ ரிஷி, அமலாதித்யன், சாரங்கதரன்’; காலவ ரிஷி தவிர, மற்ற நான்கும் பெரிய நாடகங்களே. அவ்விடத்திற்குப் போனால் நம்முடைய முக்கியமான நாடகங்களை ஆடிக் காண்பிக்க வேண்டுமென்பது எங்கள் கருத்து. இந்த ஐந்து நாடகங்களுக்கும் வேண்டிய ஆக்டர்களை ஒவ்வொருவராகச் சேர்க்க வேண்டியதாயிற்று; வக்கீல்களாகிய சிலருக்குத்தான் கோடைகால விடுமுறை இருந்தது. மற்றவர்கள் உத்தியோகத்திலிருந்தவர்களுக்கென்ன செய்வது? ஒவ்வொருவராக அவர்களை வர வழைத்து அவர்களை யெல்லாம் வரும்படி சொல்ல வேண்டியதாயிற்று; அதிலும், தற்காலம் எங்கள் சபை வெளியூருக்குப் போவதென்றால் ‘சபையாரே ஆக்டர்களுடைய செலவையெல்லாம் ஏற்றுக்கொள்வது போல் அப்பொழுது இல்லை. ஆக்டர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் செலவைத் தாங்களே ஏற்க வேண்டியதாயிருந்தது. இலங்கைக்கு வர விரும்பும் ஒவ்வொருவரும் ரூபாய் 50 கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தோம். இவ்வாறு ஒவ்வொரு ஆக்டரையும் 50 ரூபாய் கொடுத்து எங்களுடன் வரும்படி செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறவரையில் ஒரு ஆக்டரைத்தான் சபையின் செலவில் அழைத்துக்கொண்டு போனோம்; மற்றவர்கள் எல்லாம்