பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

398


தங்கள் பணத்தைக் கொடுத்தே வந்தார்கள். பணம் கொடுப்பதன்றிப் பல ஆக்டர்கள், தங்கள் ஆபீசிலிருந்து விடுமுறை பெற்று வர வேண்டியதாயிற்று. இதற்கு முன் இரண்டு மூன்று முறை எங்கள் சபை வெளியூருக்குப் போனபோது ஐந்தாறு நாள்தான் பிடித்தது; இம்முறை குறைந்த பட்சம் இரண்டு வாரம் விடுமுறை பெற வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முக்கியமான ஆக்டருக்கும் யார் மூலமாகப் போனால் லீவு கிடைக்கும் என்று யோசனை செய்து, அவர்களைப் பிடித்து அவர்களுக்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தேன். சாதாரணமாக ஆபீசுகளில் லீவு கொடுப்பதே கடினம்; அதிலும் கொழும்புக்குப் போய் நாடகமாடுவதற்கு லீவு வேண்டுமென்று கேட்பது எளிதா என்று இதை வாசிக்கும் நண்பர்களே யோசித்துப் பார்க்கலாம். எங்கள் சபையில் முக்கியமான ஆக்டர்களில் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் யாது காரணத்தினாலோ வர முடியாமற் போயிற்று. ஆகவே, பத்மாவதி வேஷத்திற்காக முக்கியமாக எஸ். பத்மநாபராவை அழைத்துக் கொண்டு போக வேண்டியது அவசியமாயிற்று. அவர் “நாடகமாடு வதற்காக வெளியூருக்குப் போவதற்காக லீவு கேட்ப தென்றால், என்னால் முடியாது. என் ஆபீசரிடம் நீங்கள் சொல்லி எனக்கு லீவு வாங்கிக் கொடுத்தால் வருகிறேன்” என்று சொல்லி விட்டார். அதன்பேரில் அவரது ஆபீசரிடம் போய், ‘பத்மநாபராவ் இல்லாவிட்டால் எங்கள் சபை கொழும்புக்குப் போவதே நின்று விடும்!’ என்று சொல்லி, நயமாகப் பேசி, இரண்டு வாரம் அவருக்கு லீவு வாங்கிக் கொடுத்தேன். சில ஆக்டர்களுடைய தகப்பன்மார்கள் அவ்வளவு தூரம் போவதென்றால் ஆட்சேபணை செய்வதாக அறிந்து, அவர்களிடமெல்லாம் போய், “இதில் ஒன்றும் அபாயமில்லை, நாங்கள் எல்லாம் போகவில்லையா?” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர்களை யெல்லாம் சம்மதிக்கும்படிச் செய்ய வேண்டியதாயிற்று.

இதிலெல்லாம் பெரிய கஷ்டம் என்ன வென்றால், பிராம்மணர்களாயிருந்த சில ஆக்டர்கள் “தூத்துக்குடியி லிருந்து கொழும்புக்கு ஒரு ராத்திரியெல்லாம் சமுத்திரத்தின் மீது போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு எங்கள். பந்துக்கள் ஒப்பமாட்டார்கள்; பிறகு எங்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள், நாங்கள் பிராயச்சித்தம் செய்து