பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/414

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

399


கொள்ள வேண்டும். இந்தச் சங்கடத்திற்கு என்ன செய்வது?” என்று ஆட்சேபித்தார்கள். அவர்களுக்கெல்லாம், ‘சமுத்திரத்தின் மீதிருக்கும்போது நீங்கள் ஒன்றும், தாகத்திற்குக்கூடப் புசிக்க வேண்டியதில்லை. ஒரு ராத்திரியில் போய்ச் சேர்ந்து விடுவோம்!’ என்று சொல்லி, அவர்களுடைய தகப்பன்மார் முதலிய பெரியோர்களைப் பார்த்து அவர்களை யெல்லாம் இசையும்படிச் செய்ய வேண்டியதாயிற்று. இவைகளை யெல்லாம் ஒருவாறு செய்து முடித்த பிறகு, எங்களுடன் சமையலுக்காகப் பிராம்மண சமையல்காரர்களை அழைத்தால் ஒருவரும் வரமுடியாதென்று சொல்லி விட்டார்கள்! “பிராம்மணர்கள் சமுத்திரத்தைத் தாண்டலாகாது; அதிலும் நாங்கள் சமையல் வேலை செய்பவர்கள், எங்களை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள்; பிறகு எங்கள் ஜீவனமே போய் விடும்!” என்று வாஸ்தமாகச் சொன்னார்கள். இப்பொழுது சிலோன், ரங்கூன், சீமைக்குப் பிராம்மணர்கள் போய் வருவது சகஜமாய் விட்டபோதிலும், அக் காலம் மிகவும் அரிதாயிருந்ததென்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்தவரை, பிராம்மணர்கள் சிலோனுக்குப் போய் வந்தது மிகவும் அரிதாம். எங்கள் சபை ஒரு முறை போய் வந்த பிறகு, அநேகம் சபைகள் போயிருக்கின்றன. நாங்கள் போய் வந்த சௌகர்யத்தைக் கண்டு மற்றவர்களும் போய் வருவது பிறகு சாதாரணமாய் விட்டது. ஆயினும் இவ்விஷயங்களிலெல்லாம், முதலில் கால் வைப்பவன் பாடுதான் கஷ்டம். அந்த வைஷ்ணவ பிராம்மணச் சமையற்காரர்களை வரவழைத்து, அவர்களுடன் பல நியாயங்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் இசையவில்லை . கடைசியாக, “வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியோர் எங்களுடன் வரப் போகிறார்கள்; அவர்களுக்கு என்ன கஷ்டம் வருகிறதோ, அதுதானே உங்களுக்கும் வரப் போகிறது? அவர்களுக் காகிறது உங்களுக்காகிறது; நீங்கள் பயப்பட வேண்டாம். அப்படி ஏதாவது வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்!” என்று சொன்னதன் பேரில், அவர்கள் ஒருவாறு இசைந்தார்கள்.

பிறகு எங்கள் படுதாக்கள், உடுப்புகள் முதலியவற்றையெல்லாம், ரெயில் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.