பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/418

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

403


கீழுமாய் அலைக்கப்பட, ஏறக்குறைய ஒருவர் தவறாமல் வாந்தியெடுத்து கீழே அவரவர்களுடைய படுக்கைக்கு வந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் நான் ஒருவன்தான் வாந்தி எடுக்காதவன். இந்த வாந்திக்கு சீ சிக்னெஸ் என்று பெயர். இது சாதாரணமாக முதல் முறை கடல் யாத்திரை செய்பவர்களுக்கெல்லாம் காணுவதுண்டு. இதற்கு அநேகம் பெயர் அநேகம் சிகிச்சை சொல்லுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில், கடல் பிரயாணம் சகஜமாகிற வரையில், உணவை மிதமாக்கி, கப்பல் மிகவும் அதிகமாய் அசையும்பொழுது பேசாது படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பதுதான் தக்க சிகிச்சை. ஆயினும் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இந்த வாந்திக்காகப் பயப்பட வேண்டியதில்லை. இப்படி வாந்தி யெடுத்து விட்டால், உடலிலிருக்கும் பித்த ஜலமெல்லாம் போய், உடம்பிற்கு ஆரோக்கியத்தையே தருகிறது. நான் மூன்று முறை தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குப் போயிருக்கிறேன். அம் முறைகளிலெல்லாம், அக் கப்பல் தலைவர்களைக் கேட்டதில், அவர்கள் எல்லோரும், ஆசியா கண்டத்தில் கப்பல் யாத்திரை செய்யும் பொழுது, சமுத்திரத்தை இவ்விடத்திற் கடப்பது மிகவும் கடினமானது; முக்கியமாக அரேபியன் சமுத்திரமும், வங்காளக் கடலும் கலக்கும் இடத்தில், கப்பலானது மிகவும் கலகப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு இம்முறை, கப்பலின் பங்கில் (படுக்கையறையில்) என்னுடன் படுத்திருந்தவர் ஒரு கோமுட்டிச் செட்டியார்; கோமுட்டிகளெல்லாம் பயங்காளிகள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆயினும் “முதலியார் ஜம்பம்!” என்று முதலியார்களைப் பற்றிச் சொல்வதுபோல், பயங்காளி கோமுட்டி என்று ஒரு வழக்கச் சொல் உண்டு. அந்தப் பழமொழிக்கு ஒத்த குணமுடையவர் என்னுடனிருந்த செட்டியார் (அவர் பெயரை இங்கு நான் வெளியிட இஷ்டமில்லை). அவர் கண்களில் நீர் ததும்ப, நீதான் எப்படியாவது என்னைக் காப்பாற்றி, என் பெண்சாதிப் பிள்ளைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கவேண்டும்!” என்று அழ ஆரம்பித்தார். அவருக்குச் சமாதானம் சொல்வது என் பாடு போதுமென்றாயிற்று. பிறகு “இரவு எவ்வளவு நீடித்திருந்தாலும் பொழுது விடிய வேண்டிய காலம் வந்துதான் தீர வேண்டும்!”