பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

நாடக மேடை நினைவுகள்


என்னும் முதுமொழிக்கிசைய, அதிகாலையில் கொழும்புத் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். கப்பல் ஆட்டம் நீங்கி, நிம்மதியடைந்தோம். கொழும்புத் துறைமுகத்தின் நிபந்தனைகளின் பிரகாரம், எங்கள் சாமான்களையெல்லாம் பரிசோதித்து, எங்களையும் வைத்தியர்கள் பரிசோதித்த பிறகுதான் நாங்கள் கப்பலைவிட்டு இழியவேண்டியதாயிற்று. இதற்குள்ளாக, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், கொழும்பில் பெரிய கனவானாயிருந்த - நான் முன்னே கூறியபடி எங்களைக் கொழும்பிற்கு வரும்படி அழைத்த சர். ராமநாதன் என்பவரின் மூத்த குமாரரான, ராஜேந்திரா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவரது உதவியினால் எங்கள் சாமான் பரீட்சையும், வைத்தியப் பரீட்சையும் சீக்கிரத்தில் முடிந்தது.

பிறகு கப்பலிலிருந்து போட்டுகளில் (படகுகள்) இழிந்து, பியர் போய்ச் சேர்ந்தோம். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன் நாங்கள் கப்பல் யாத்திரையில் பட்ட கஷ்டத்திற் கெல்லாம் பரிஹாரம் கிடைத்தது. யாழ்ப்பாணத்து வாசியாகிய, இலங்கைத்தீவில் மிகவும் மதிப்பைப் பெற்ற சர். கனக சபையவர்களை முன்னிட்டு, கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான பெரிய மனிதர்கள் நகைமுகத்துடன் எங்களை நல்வரவழைத்தனர். சர். கனகசபை, இந்தியாவிலிருந்து, தமிழராகிய நமது சகோதரர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்; முதன் முறை ஆதலால், அவர்களை நாம் துறைமுகம் சென்று நல்வரழைக்க வேண்டுமென்று, கொழும்பிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் எழுதி, அவர்களை வரும்படி செய்தனராம். இச்சீமான் இப்பொழுது காலமாய் விட்டார். அப்படியிருந்தும், அன்று அவர் எங்கள் சபையோருக்குச் செய்த மரியாதையானது அவரை இன்னும் நான் மறவாதிருக்கும்படிச் செய்கிறது.

இவ்வாறு நாங்கள் எல்லாம் நல்வரவழைக்கப்படவே, ஸ்வாமியின் கருணையினால் ஆரம்பம் திருப்திகரமாயிருக்கிறது, முடிவுவரை இப்படியே இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, எனது நண்பர்களுடன், எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போய்ச் சேர்ந்தேன். போய்ச் சேர்ந்து எனது காலைக் கடனை முடித்துக்கொண்டு, தாகத்திற்குச் சாப்பிட்டவுடன், எனக்குக் கொழும்பில்