பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

403



நூதனமாய்க் கிடைத்த நண்பர்களில் ஒருவராகிய சதாசிவம் என்பவர், என்னை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “நீங்கள் உங்களுடைய ஐந்து நாடகங்களையும் 2500 ரூபாய்க்குக் கண்டிராக்டாக விட்டிருப்பதாகக் கேள்விப் படுகிறேன்; இதோ ஒருவர் அந்த ஐந்து நாடகங்களுக்கும் 3000 ரூபாய் தருவதாக, செக்குடன் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில் காற்று நமக்கு அனுகூலமாய்த்தான் அடிக்கிறது என்று சந்தோஷப்பட்டவனாயினும், ஒரு முறை வாக்குக் கொடுத்தபின் அதனை மாற்றுவது நியாயமல்ல, முடியாதென்று அவருக்குப் பதில் உரைத்து, செக்குடன் வந்தவரை அனுப்பிவிடச் செய்தேன்.

பிறகு அன்று காலை

முதல், சபை கொழும்புவை விட்டுத் திரும்பிய வரையில், எங்களைப் பார்க்க அந் நகர வாசிகளில் அநேகர் ஒருவர் மாறி ஒருவராய் வந்து கொண்டிருந்தனர் என்று சொல்வேனாயின் அது பொய்யாகாது. சாப்பிடுகிற வேளை உறங்குகிற வேளை தவிர யாராவது வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அன்று மத்தியானம், முன்னாள் இரவு தூங்காததற்காக, நானும் தூங்கி எனது ஆக்டர்களையும் தூங்கச் சொல்லிவிட்டு, பிறகு சாயங்காலத்திற்கு மேல், அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வந்தோம். இந்த வழக்கம் இப்பொழுதும் எங்களுக்குண்டு. யாதாமொரு ஊருக்குப் போனால், அன்று சாயங்காலம் நாடகமில்லா விட்டால் எல்லா ஆக்டர்களுமாக அங்குள்ள முக்கியமான கோயிலுக்கு, சிவன் கோயிலோ, விஷ்ணு கோயிலோ போய் தரிசித்துவிட்டு வருவோம். நான் அன்று கோயிலுக்குப் போனபோது சிவபெருமானுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனை என்னவென்றால், எப்படியாவது சிங்களவாசிகள் மனத்தை எங்கள் சபையார் திருப்தி செய்யும்படி செய்ய வேண்டுமென்பதே. இவ்வாறு நான் பிரார்த்தனை செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்விடத்தில் எங்களுக்குப் புதிதாய் ஏற்பட்ட சிநேகிதர்களுள் பலர், காலையில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, உங்கள் சபையைப் பற்றி நாங்கள் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கி