பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/422

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

407


திருந்து போய் எனது நண்பர்களுடன் கலந்து பேச ஆரம்பித்தேன். அவர்களெல்லாம், “பிசாசு விட்டுப் போய்விட்டதா? இனிப் பேசலாம்” என்று ஏளனம் செய்தார்கள். இப்படி நடப்பது எங்கள் சபை வெளியூருக்குப் போகும் போதெல்லாம் எனக்குச் சாதாரணமாகி விட்டது. இது தவறல்லவா என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. தவறென அறிந்தும் அதைத் தவிர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்றுதான் நான் பதில் உரைக்கக்கூடும்.

பிறகு, ராத்திரி நாடகமானபடியால், ஆக்டர்களெல்லாம் 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு, வேஷம் தரிக்க அருகிலிருந்த நாடக சாலைக்கு நடந்து போனோம். பிறகு நாங்கள் எல்லாம் வேஷம் தரித்துக் கொண்டிருக்கும்பொழுது, அந்த நாடகசாலையின் பழக்கப்படி, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்குமுன், நாடக சாலையின் வெளிக் கதவுகளைத் திறக்க, ஒரே கும்பலாய் ஜனங்கள் நுழைய ஆரம்பித்தார்கள். இதை நான் பார்த்தறிந்தவனல்ல, கேட்டறிந்தேன். ஏதாவது நாடகத்தில் நான் ஆடுவதானால், நான் மேடையின்மீது வருகிற வரையில், ஜனங்கள் வந்திருக்கின்றார்களா? எத்தனை பெயர் வந்திருக்கின்றனர்? இவைகளை யெல்லாம் கவனிக்கக்கூடாது என்கிற ஒரு கோட்பாடுடையவன் நான்; இதைப்பற்றி என் நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் ரிசர்வ் பண்ணியிருந்த நாற்காலிகள் தவிர மற்ற இடமெல்லாம் நிரம்பிவிட்டது என்று இதே வேலை யாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கமுடைய சில நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். உடனே வெளியில் டிக்கட்டாபீசிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சபை பொக்கிஷதாராகிய வ. ரங்கசாமி ஐயங்கார் உள்ளே நான் வேடம் தரித்துக்கொண்டிருக்கும் இடம் வந்து, “சம்பந்தம்! சம்பந்தம்! பாவி! ஏமாந்து போனாயே? நாடகம் ஒன்றிற்கு ஐந்நூறு ரூபாய்க்கு கன்டிராக்டு விட்டு விட்டாயே! இன்றைக்கு மாத்திரம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டானே!” என்று என்னை வைய ஆரம்பித்தார்! இதில் வேடிக்கை யென்னவென்றால், இந்த மெம்பர்தான், சென்னப் பட்டணத்தி லிருந்த பொழுது நாடகம் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு கண்டிராக்ட் கேட்கிறார்கள் ஒப்புக்கொள்ளலாமா என்று ரங்கவடிவேலு தந்தி கொடுத்த பொழுது, “கட்டாயமாய்