பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/423

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

408


ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சபைக்குப் பெரும் நஷ்டம் வரும்” என்று வற்புறுத்தினவர்! அன்றைத் தினம் ஆயிரத்து நானூற்றுச் சில்லரை ரூபாய்க்குமேல்வசூல் ஆயிற்று என்று கண்டிராக்டரே என்னிடம் ஒப்புக்கொண்டார். எனக்கிருந்த சந்தோஷமெல்லாம் சபைக்கு நஷ்டமில்லாமற் போனது மன்றி, கன்டிராக்டரும், இந்தச் சபை நாடகத்தைக் கன்டிராக்ட் எடுத்தோம்; நமக்கு இவ்வளவு நஷ்டமுண்டாயிற்று என்று துக்கிக்காதபடி அவரும் சந்தோஷப்படும்படி நேர்ந்ததே என்பதேயாம். இப்படி ஏராளமான ஜனங்கள் வருவார்களென்று இலங்கைத் தீவுவாசிகளான எங்களது புதிய நண்பர்களே, தாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். இவ்விஷயத்தில் ஒரு சிறு கதை. அந்த நாடக சாலையை மொத்தத்தில் சில வருஷங்களுக்கு வாடகைக்கு வாங்கிக் கொண்டு நடத்தி வந்தவர் வார்விக் மேஜர் என்பவர்; பிறகு இவர் “சர்” பட்டம் பெற்றார். இவரிடம் போய் எனது உயிர் நண்பர் நாடகசாலையை 5 நாடகங்களுக்கு வாடகைக்குக் கேட்ட பொழுது “நான் சாதாரணமாகத் தினத்திற்கு நூறு ரூபாய்க்குக் குறைந்து விடுவதில்லை. ஆயினும் நீங்கள் வெளி ஊறார். உங்களுக்கு அதிகப் பணம் வசூலாகாது. ஆகவே தினம் ஒன்றிற்கு எழுபந்தைந்து ரூபாய்க்கு விடுகிறேன்” என்று சொல்லி, அப்பணத்தை முன்னதாகவே தங்களுக்குக் கட்டி விட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தாராம்; பிறகு இவர்களிட மிருந்து வசூலாவது கடினம் என்று எண்ணினார் போலும்! இவருக்குத் தமிழ் பாஷை தெரியாதிருந்த போதிலும், நாடகத்தின் கடைசி வரைக்கும் இருந்து மிகவும் நன்றாய் இருக்கிறதெனப் புகழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன். இவர் என்னைப்பற்றிச் சொன்ன சிறு சமாச்சாரத்தை இங்கு எழுது கிறேன். இவ்விடம் நாங்கள் முதல் நாடகமாக ஆடினது “லீலாவதி சுலோசனா.” இதில் நான் மூன்றாவது காட்சியில் தான் முதல் முதல் வருகிறேன். அதிலும் அக்காட்சியில் நான் செய்ய வேண்டியதெல்லாம் அரங்கத்தின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் நடந்து போகவேண்டியவனே. அப்படி நடந்து சென்றதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வார்விக் மேஜர் தன் பக்கத்திலிருந்த சதாசிவம் என்பவரைப் பார்த்து, “இது யார் இந்தச் சிறுவர்? நல்ல ஆக்டர்போல் தோன்றுகிறாரே” என்று கேட்டாராம். அதற்கு எனது