பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/425

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

நாடக மேடை நினைவுகள்


பொழுது, அவர் “நாடகத்தின் முதற் காட்சி முடிந்தவுடன், உங்கள் சபை இவ்வூரார் மனத்தைத் திருப்தி செய்வதைப் பற்றி எங்களுக்குச் சிறிதும் சந்தேகமில்லாமற் போயிற்று!” என்று எனக்குத் தெரிவித்தார்.

அன்றிரவு நடந்த நாடகத்தில் சங்கீதத்தில் லீலாவதியாக நடித்த ஸ்ரீனிவாசராகவாச்சாரியும், கமலாகரனாக நடித்த பாலசுந்தர முதலியாரும் நல்ல பெயர் பெற்றார்கள். ஸ்ரீனிவாசகராகவாச்சாரி அப்பொழுதுதான் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராக ஆரம்பித்தார். ஆயினும் அவர் ஸ்திரீ வேஷத்தில் நடித்தது கொழும்புவாசிகளால் மெச்சப்பட்டது. ஆயினும் நாடகம் பார்க்க வந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடி வேலுவே. கொழும்பு ஜலம் அவர் உடம்பிற்கு ஒப்புக் கொள்ளாததனாலேயோ அல்லது அச்சமயம் இலங்கைத் தீவில் மழைக்காலமாதலால் அம் மழையில் நனைந்ததனாலேயோ எக்காரணத்தினாலேயோ அவருக்குத் தொண்டை நன்றாய்க் கட்டிக்கொண்டது. நம்முடைய பூர்வீகக் கவிராயர்கள் வேடிக்கையாகக் கூறுவது போல், அவருக்குக் கம்மல் காதிலுமிருந்தது, தொண்டையிலுமிருந்தது. இதனால் அவர் ஒரு பாட்டும் பாட முடியாமற் போயிற்று. எவ் வளவோ இதற்குச் சிகிச்சை செய்து பார்த்தும் பாட முடியாமற் போயிற்று. இருந்தும் அவர் சுலோசனையாக நடித்தது எல்லோரையும் மிகவும் சந்தோஷிக்கச் செய்தது என்பதற்குத் தடையில்லை. அவர் “ரோஜாப்பூ காட்சி” என்று சொல்லப்படும் இந்நாடகத்தின் மத்தியில் வரும் ஒரு காட்சியில் நடித்தபொழுது, வந்திருந்தவர்கள் கரகோஷம் செய்தது இன்னும் என் செவியில் தொனிக்கிறது போலிருக்கிறது. இந்த ஓர் இடத்தில் மாத்திரமன்று; அவர் வந்த காட்சிகளில் முக்கியமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இடைவிடாது கரகோஷம் செய்தனர் என்று கூறுவது கொஞ்சமேனும் மிகையாகாது. ஒரு முறை சபையோரின் மனத்தைக் கவர்ந்துவிட்டால், அவர்களுக்கு இதுதான் சந்தோஷத்தைத் தரும், இது தராது என்பது கிடையாது போலும். இதற்கப்புறம் இங்கு இவர் நடித்த நான்கைந்து நாடகங்களில் புதுச் சேலைகளைத் தரித்துக் கொண்டு மேடையின் மீது தோன்றும் போதெல்லாம் கரகோஷம் செய்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. நான் ஏதோ