பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/426

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

411


எனது ஆருயிர் நண்பனை அதிகமாகப் புகழ்கின்றேன் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாகாது. அவர் கொழும்புவாசிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இச் சந்தர்ப்பத்தில் எடுத்து எழுதுகிறேன். அன்றைத் தினம் நாடகம் பார்க்க வந்தவர்களுள், இலங்கைத் தீவில் மிகவும் கியாதி பெற்றிருந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர். பன்முறை விவாகம் புரியும்படி நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்த தன் தாயாரிடம் போய், “நான் சுலோசனாவைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன்!” என்று சொன்னாராம். இதை அவரது தங்கையாகிய ஒரு மாதாரசியே என்னிடம் பிறகு சொல்லக் கேட்டேன்.

ஹாஸ்ய பாகத்தில் எம். துரைசாமி ஐயங்கார் நன்றாக நடித்ததாகச் சொன்னார்கள். அவர் இந்நாடகத்தில் ‘அவசரப்படேல்’ காட்சியென்று வழங்கும் ஒரு காட்சியில் சாதாரணமாக மிகவும் நன்றாய் நடித்து எல்லோரையும் சிரிக்கச் செய்வார். இவர் இங்கு இக்காட்சியை நடித்த பிறகு சில தினங்கள் வரையில், இவரைக் கொழும்பு நேசர்கள் பார்த்தால் ‘அவசரப்படேல்’ என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

நானும் நன்றாக நடித்ததாக என்னிடம் சொன்னார்கள். அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எங்களுடைய புதிய நண்பர்களெல்லாம், ஒருவர் பாக்கியில்லாமல், உள்ளே வந்து எங்களையெல்லாம் புகழ்ந்து சந்தோஷிக்கச் செய் தனர். இந்நாடகமானது, சர். ராமநாதனின் தாயாதியாகிய சர்.பி. அருணாசலம் என்பவரின் முன்னிலையில் நடந்தது. அவரும் அவருடன் விஜயம் செய்த ஒரு வெள்ளைக்காரச் சீமானும், சீமாட்டியும் நாடகம் நடித்ததைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

அன்றிரவு நான் வேஷத்தைத் களைந்துவிட்டு, எங்களிருப்பிடம் போய் ஈஸ்வரனைத் துதித்துவிட்டு அதுவரையில் ஒரு மாசம் புரியாத சுக நித்திரை புரிந்தேன்.

மறுநாள் நாங்கள் கண் விழித்தது முதல், நாள் முழுவதும், எங்களை நாடக மேடையில் பார்த்த நண்பர்கள் ஓயாது எங்கள் இருப்பிடம் வந்தனர். இது நாங்கள் இலங்கையைவிட்டுத் திரும்பும் வரையில் நிகழ்ந்ததெனவே