பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/428

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

403


மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இதைப்பற்றி ஆங்கிலத்தில் சில வருஷங்களுக்குமுன் எங்கள் சபை நடத்தி வந்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில், நான் எழுதிய ஒரு வாக்கியத்தை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “இம்முறையும் இன்னும் எங்கள் சபை சிங்களத்திற்குப் போயிருந்த இரண்டு முறையும் எனக்கும் எனது சபை அங்கத்தினருக்கும் சிங்களவாசிகள் செய்த உதவிகளையெல்லாம் எடுத்துரைக்க அசக்தனாயிருக்கிறேன்; அன்றியும் அவைகளுக்காக, எனது இலங்கை நண்பர்களுக்குப் பிரதி செய்ய முடியாதவனாயிருக்கிறேன்; நான் மறுபடியும் அங்கு சென்று அவர்களையெல்லாம் காண முடியுமோ என்னவோ சந்தேகம். ஆகவே அவர்களெல்லாம் என்னிடமும், எனது சபை அங்கத்தினரிடமிருந்து பாராட்டிய அன்பிற்காகவும், நன்றிக்காகவும் எனது வந்தனத்தை - என் மனமார்ந்த வந்தனத்தை - இதன் மூலமாகச் செலுத்துகின்றேன்; இங்கெழுதி யுள்ளதை அங்குள்ள நண்பர்களுள் சிலராவது கண்ணுற்று, என் வந்தனத்தை அங்கீகரிப்பார்களாக; அவர்கள் செய்த பேருதவிக்கெல்லாம், நான் செய்யக்கூடிய கைம்மாறு வேறொன்றும் அறிகிலேன்.”

நாங்கள் இங்கு ஆடிய இரண்டாவது நாடகம் “மனோஹர.” இந்த நாடகத்தில் பத்மாவதியாக நடித்த பத்மநாபராவ் எல்லோராலும் மிகவும் சிலாகிக்கப்பட்டார். ரங்கவடிவேலு விஜயாளாக நடித்ததைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஒரு முறை அவர்மீது அன்பு கொண்ட பிறகு, ஜனங்கள் நாடக மேடையின்மீது அவர் ஏதாவது தவறு இழைத்தாலும் அதுவும் அற்புதமான நடிப்பு என்று எண்ணும்படியான மனோஸ்திதிக்கு வந்துவிட்டனர். இந்நாடகத்திற்கு வாராத சில நண்பர்கள் மறுநாள் எங்களிடம் வந்து, “இந்நாடகம் மிகவும் நன்றாகயிருந்ததாகக் கேள்விப்பட்டோம். இப்படிப்பட்ட சிறந்த நாடகத்தை ஏன் சனிக்கிழமையில் போடக்கூடாது? வாரத்தில் இடையிலுள்ள தினங்களில் போடும் நாடகங்கள் அவ்வளவு நன்றாயிராது என்று நாங்கள் வரவில்லை; அன்றியும் இரண்டு ராத்திரிகள் ஒருங்கே விழிப்பதென்றால் கஷ்டமாயிருந்தது; இந்நாடகத்தை மறுபடியும் எப்படியாவது போடுங்கள், நாங்கள் பார்க்கவேண்டும்” என்று வற்புறுத்தினர். இந்த மனோஹரன்