பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/429

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

நாடக மேடை நினைவுகள்


நாடகம் நான் ஆடுவதில் எனக்குள்ள கஷ்டத்தை இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆகையால் அவர்களுக்கெல்லாம், இம்முறை முடியாது, ஈஸ்வரன் கிருபையால் இன்னொரு முறை இலங்கைக்கு நாங்கள் வந்தால் போடுகிறோம் என்று பதில் சொன்னேன்.

பிறகு மூன்றாவது நாடகமாக காலவ சரித்திரம் நடத்தினோம். அதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முதற்காட்சியில் நர்த்தனம் செய்தது, முன்பிருந்ததைவிட நாடகாபிமானிகள் அவர்மீது அதிகப் பிரேமை கொள்ளச் செய்தது. இந் நாடகத்தில் வடிவேலு நாயக்கர், சந்தியாவளியாக நடித்தது பலரால் புகழப்பட்டது. ராமகிருஷ்ண அய்யர் இன்றும் வேடிக்கையாய்க் கூறினபடி, “காலவ நாடகம், வடிவேலு தினம்; மனோஹர நாடகம், பத்மநாபராவ் தினம்; சாரங்கதரா, ரங்கவடிவேலு தினம்; அமலாதித்யன், வாத்தியார் தினம்” என்று வேடிக்கையாக எங்களிடம் சொல்வது வழக்கம். இதற்கு அர்த்தம், இன்னின்ன ஆக்டர் இன்னின்ன நாடகங்களில் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்ட இடமுண்டு என்பதேயாம். வடிவேலு நாயக்கர், இந்நாடகத்திலும் இதற்கு முந்திய இரண்டு நாடகங்களிலும் ஸ்திரீ வேஷம் தரித்ததைக் கண்டவர்கள், இவர் இவ்வளவு கறுப்பாயிருக்கிறாரே, இவர் நாடக மேடைமீது இவ்வளவு சிவப்பாகவும் அழகாகவும் எப்படித் தோன்றுகிறார் என வினவ, இது அவருக்கு வேஷம் தரிப்பதன் சூட்சுமத்திலிருந்துதான் என்று நான் பதில் சொன்னேன். அதன் பேரில், அவ்விடத்திய சில ஆப்த நண்பர்கள், எங்களுக்கெல்லாம் வேஷம் தரிப்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டுமென்று உத்தரவு பெற்று, சாயங்காலம் நாங்கள் வேஷம் போட்டுக் கொள்ளும்பொழுது, முதலிலிருந்து கடைசி வரைக்குமிருந்து பார்த்தார்கள்.

முன்றாம் பாகம் முற்றிற்று