பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நாடக மேடை நினைவுகள்


அக் காலத்தில் என் ஞாபக சக்தியானது கூர்மையாகவேயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய இரண்டு மூன்றுமுறை ஏதாவது ஒன்றைப் படிப்பேனாயின் அதைப் பிறகு அப்படியே ஒப்பித்துவிடுவேன். அன்றைத்தினம் நடந்த நாடகத்தை மிகவும் கவனமாய்க் கவனித்து வந்தேன். வசன பாகமெல்லாம் என் மனத்தில் அப்படியே படிந்து விட்டது. சங்கீதப் பயிற்சி கொஞ்சமும் அக்காலத்தில் இல்லாதவனாயிருந்தபடியால், நான் கேட்ட சங்கீதத்தை சரியாக அனுபவிக்க அசக்தனாயிருந்தேன். நான் கேட்ட பாட்டுகள் ஒன்றும் என் மனத்தில் நிலைக்கவில்லை.

நான் அன்றைத்தினம் கண்ட ‘ஸ்திரீ சாகசம்’ என்னும் கதையையே, ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகமாக எழுதி பிறகு வெளியிட்டிருக்கிறபடியால், அக்கதையைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை என நம்புகிறேன். அக்காலத்தில் இக் கம்பெனியார் நாடகங்கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்தால் இதை வாசிப்பவர்களுக்கு வினோதமாயிருக்கும். இன்றிரவு இன்ன நாடகம் என்று கோவிந்தசாமி ராவ் தீர்மானித்துப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்துவிட்டு, தனது நடர்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்து, நாடகக் கதையை அவர்களுக்குச் சொல்லிவிடுவார். கதை சொல்லி முடிந்ததும் கதையில் இன்னின்ன பாத்திரம் இன்னின்னார் நடிக்கவேண்டியது என்று பகிர்ந்து கொடுத்து விடுவார். அதன்பேரில் வேஷதாரிகளெல்லாம் நாடகத்தில் பேச வேண்டிய வசனங்களைத் தங்கள் புத்திக்கேற்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே! தற்காலத்தில் பெரும்பாலும் இருப்பதுபோல நாடகத்தில் வசனம் அச்சிடப் பட்டாவது எழுதப்பட்டாவது கிடைத்திலது! வசனம் வரையில் ஒவ்வொரு வேஷதாரியும் நாடக ஆசிரியனாகவே இருந்தான்! இவ்வாறு சமயோசிதமாய் அவர்கள் காட்சிக்குக் காட்சி பேசவேண்டி வந்தபோதிலும், அவர்களில் பெரும்பாலார் தஞ்சாவூரிலிருந்த தமிழ் நன்றாகப் பேசும் வன்மை வாய்ந்தவர்களாயிருந்தபடியால், மொத்தத்தில் நாடகமானது கேட்கத் தக்கதாகவேயிருந்தது. வசனத்திற்கு ஒத்திகை மேற்கூறிய அளவுதான்; ஆயினும் பாட்டுகளுக்கு மாத்திரம் ஒத்திகை நடத்தி வந்தார்கள். இன்னின்ன காட்சியில் இன்னின்ன பாட்டுகள் பாட வேண்டுமென்று கோவிந்தசாமி