பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார்

425



இவ்வாறு பன்முறை ஒரு பாகத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பதனால் இன்னொரு முக்கியமான சுகிர்தமுண்டு. நாம் நடிக்க வேண்டிய பாகத்தைப் பன்முறை திருப்பித்திருப்பிப் படிக்குங்கால், இன்னின்ன புதிய மாதிரிகளில் நடிக்கலாமென்று புதிய யோசனைகள் நமக்கு உதிக்கலாம். முக்கியமாக ஷேக்ஸ்பியர் முதலிய மஹா நாடகக் கவிகள் எழுதிய நாடகங்களைப் பன்முறை படிப்பதனால் இந்த அனுகூலத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்கு நியாய சாஸ்திர சாதகத்திலிருந்து ஓர் உதாரணத்தைக் கொடுக்கிறேன். நியாய சாஸ்திரத்தில் மிகுந்த புத்திமான் என்று பெயர் பெற்ற காலஞ்சென்ற வி. பாஷ்யம் ஐயங்கார் என்பவர், ஒரு நியாய புஸ்தகத்தில் ரீஸ்ஜூடிகேடா என்னும் ஒரு சட்டத்தை எத்தனையோ ஆயிரம் முறை படித்திருந்தபோதிலும், புதிதாக ஒரு வழக்கில் அதைப்பற்றிப் பேசவேண்டி வந்தால், மறுபடியும் அதைப் படிக்கச் சொல்லிக் கேட்பாராம். இதுவரையில் தோன்றாத புதிய யோசனை அதனின்றும் தோன்றுகிறதா என்று அறிவதற்காக! நாடக சபையிலும் நாடகப் பாத்திரங்களின் பாகங்களை இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது அதிக அனுகூலத்தைத் தரும் என்பது என் கொள்கை.

மேற்சொன்னபடி அமலாதித்யன் பாகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது, எங்கள் சபையின் மற்ற அங்கத்தினர் தங்கியிருந்த இடமிருந்து, ஒரு கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. அதைப் பிரித்துப் பார்க்கும் பொழுது அன்றைத்தினம் நாடகத்தில் என்னுடன் ஹரிஹரனாக நடிக்க வேண்டிய சத்தியமூர்த்தி ஐயருக்கு அதிக ஜுரமாயிருக்கிறது, அவர் இன்று ஆடமுடியாதென்று, எழுதியிருந்தது. நாடக ஆரம்பத்திற்கு ஆறு ஏழு மணிக்கு முன்னர் இச்செய்தி வந்து சேர்ந்தால் நான் என்ன செய்யக்கூடும்? அதுவும் ஹரிஹரன் பாகம் மிகச் சிறு பாகமல்ல; உடனே விரைவில் என் பாகத்தை முடித்துவிட்டு அந்த வீட்டிற்குப் போய் ராமகிருஷ்ண ஐயருக்கு அப்பாகத்தை ஒருமுறை படித்துக்காட்டி, எப்படியாவது அதைக் குருட்டுப்பாடம் செய்துவிடு என்று சொல்லிவிட்டு, நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயரும் அச் சிறிது நேரத்தில் பாடத்தை நன்றாய்ப் படித்து அன்றிரவு நன்றாக நடித்தார்.