பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/441

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

நாடக மேடை நினைவுகள்


என்னுடன் பழகிய எனது ஆக்டர்களிடமெல்லாம் இந்த நற்குணமிருந்தது; அதாவது, ஏதாவது ஆபத்தில் கை கொடுத்து உதவும்படியான குணம். இக்காலத்திய என் இளைய ஆக்டர்களும் இக் குணத்தை வழிபட்டு நடப் பார்களாக.

அன்றிரவு குறித்த மணிப்பிரகாரம் கவர்னர் அவர்கள் வரவே, நாங்களும் நாடகத்தை ஆரம்பித்தோம். நான் வரும் முதற் காட்சியில், என் தனி மொழிக்கு முன்பாக, நான் சில வார்த்தைகள்தான் பேசவேண்டியிருந்தது. என் தனி மொழியை ஆரம்பிப்பதற்காக என் முகத்தை ஜனங்கள் உட்கார்ந்திருக்குமிடமாகத் திருப்பியபொழுது, ஹாலில் இனி ஒருவருக்கும் இடமில்லாதபடி ஜனங்கள் நிறைந்திருந்ததைக் கண்டேன். பிறகு நான் விசாரித்ததில் உட்கார இடமில்லாமல் நிற்பதற்காகச் சில நாட்டுக்கோட்டைச் செட்டியார் 5 ரூபாய் விகிதம் கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். அன்றைத் தினம் மொத்த வரும்படி ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு ரூபாய் என்று பிறகு அறிந்தேன். இப் பணமானது கண்டிராக்டரைச் சேர்ந்ததாயினும், ‘நம்முடைய சபையின் நாடகத்தைப் பார்க்க இத்தனை திரளான சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருக்கிறார்களே யென்று எனக்குக் குதூஹலமுண்டாயிற்று. சாதாரணமாக என் தனி மொழிகளையெல்லாம் கொஞ்சம் மெல்லிய குரலுடன்தான் ஆரம்பிப்பது வழக்கம். அப்படி நான் அன்று ஆரம்பித்த பொழுது, ஹாலெங்கும் நிசப்தமாகி விட்டது. வர வர என் குரலை உயர்த்திக் கொண்டு போய் என் முதல் தனி மொழியை நான் முடித்தபொழுது, வந்திருந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்தனர். பிறகு நான் அறிந்தபடி கவர்னர் அவர்கள்தான் இதை முதலில் ஆரம்பித்தனராம். அன்றிரவு அமலாதித்யன் நடிக்க வேண்டிய முக்கியப் பாகங்களிலெல்லாம், ஒன்றும் விடாது கரகோஷம் செய்து வந்தனர். அம்மாதிரியான கரகோஷத்தை இதற்கு முன்னிலும் நான் பெற்றவனன்று; பிறகும் பெற்றவனன்று. இதையெல்லாம் எனக்குச் செய்த மரியாதையாகப் பாவியாது எங்கள் சபைக்குச் செய்ததாகக் கொண்டு உளம் பூரித்தேன். இந்நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சி, அமலாதித்யனும் அபலையும் சந்திக்கும் காட்சி; இதில்தான், “இருப்பதோ