பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/442

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்


இறப்பதோ” என்று ஆரம்பிக்கும் ஒரு பெரிய தனி மொழியுண்டு. அத் தனிமொழியை ஆக்டு செய்வது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அக் காட்சியில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலுவும் நானும் நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இக் காட்சியில் நான் நடித்ததைவிட என் நண்பர் நடித்ததைச் சபையோர் புகழ்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. ஆயினும் என்வரையில், இக்காட்சியைவிட, அமலாதித்யன் தன் தாயாருடன் பேசும் பிறகு வரும் காட்சியே, நடிப்பது மிகவும் கஷ்டமென என் அபிப்பிராயம். இக்காட்சியில், தனது அன்னைக்குத் தோற்றாது, அமலாதித்யன் கண்களுக்கு மாத்திரம் அவனது தந்தையின் அருவம் தோன்றும்பொழுது, அதை வெருண்ட கண்களுடன் பார்த்து, அது அரங்கத்தைக் கடந்து செல்லும்போது, மலர்ந்த என் கண்களால் அதை நான் பின்தொடர்ந்து போவது போல் நடிப்பது எப்பொழுதும் சாதாரணமாக ஜனங்களைத் திருப்திசெய்வது வழக்கம். இன்றைத் தினம் அக்காட்சியில் நடித்தபொழுது மிகுந்த கல்விமான்களும் பெரியோர்களும் நிறைந்த சபையாயிருக்கிறது. இவர்களில் சிலர் சீமையில் பெரிய ஆங்கில ஆக்டர்கள் இந்த ஹாம்லெட் பாத்திரத்தை ஆடுவதைப் பார்த்திருப்பார்கள்; அவர்களுக்கெல்லாம், நம்முடைய முழு சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும் என்று விருப்பங்கொண்டவனாய், அந்தப் பாகம் வரும்பொழுது, நடிக்கும் என் முழுத் திறமையையும் கொண்டு நடித்தேன். அருவமானது அமலாதித்யன் கண்களுக்குத் தோன்றிய க்ஷண முதல், அது மறையும்வரையில், நான் நடித்ததையெல்லாம் நிசப்தமாய்க் கண்கொட்டாது கவனித்து வந்தார்கள் என்று, எனது நண்பர்கள் பிறகு சொல்லக் கேட்டேன். நான் அவர்களைப் பாராவிட்டாலும், என் மனத்தினுள், சபையிலுள்ளவர்களெல்லாம் நாம் நடிப்பதை ஏகாக்ர சிந்தையர்களாய்க் கவனிக்கிறார்களென்று அறியும் தன்மை எனக்குண்டென நம்புகிறேன். அவர்கள் கரகோஷம் செய்வதைவிட, இவ்வாறு அவர்களது மனத்தை யெல்லாம், வசீகரணம் செய்வதே ஒரு ஆக்டருக்குப் பெருமையென்பது என் அபிப்பிராயம். இக்காட்சியில் நான் நடிக்கும்பொழுது என்னுடன் நடிக்கும் ஆக்டர்களெல்லாம்,