பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/443

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

நாடக மேடை நினைவுகள்


சைட் படுதாவண்டை நின்று பார்ப்பது வழக்கம். அன்றைத் தினம் இக்காட்சி நடிக்கப்பட்டபொழுது, ஹாலின் மத்தியிலிருந்த ஒரு மனிதன், கூச்சலிட்டான்; பிறகு, அவர் குடித்திருந்ததாயும், நான் நடித்ததைப் பார்த்து ஏதோ பயந்ததாகவும் சொல்லக் கேட்டேன்; அம் மனிதன் இவ்வாறு கூச்சலிட்டவுடன், ஹாலில் என்னைக் கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவனிருக்குமிடம் திரும்பி, “உஸ்!”என்று அவனை அதட்டினார்கள். தாங்கள் வியந்து கொண்டிருந்ததைத் தடை செய்ததற்காக அவனை இவ்வாறு அதட்டியதே நான் ஆக்டு செய்ததற்கு அவர்கள் செய்த பெரிய மரியாதை என்று இன்றளவும் நான் நினைக்கிறேன். அக்காட்சியின் முடிவில் சபையோரெல்லாம் ஒரே கர கோஷம் செய்தனர். ஏறக்குறைய நாடக அந்தம்! வரையில் இருந்துவிட்டுப் போன கவர்னர் அவர்கள் நாடகம் மிகவும் நன்றாக இருந்ததாகப் புகழ்ந்தாராம்; அவர், ‘இன்று ஹாம்லெட்டாக நடித்தவர் எனக்கு சர். ஹென்றி இர்விங்கை நினைப்பூட்டுகிறார்’ என்று என்னைப் பற்றிக் கூறியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. சர் ஹென்றி இர்விங் என்னும் இங்கிலாந்து தேசத்திய மிகச்சிறந்த ஆக்டருடன் என் பெயரையும் ஒத்திட்டுச் சொன்னதே எனக்குப் பெரும் புகழாகக் கொள்ளுகிறேன். அன்றையத் தினம் நாடகத்தைப் பார்த்த டாக்டர் சின்னதம்பி என்பவர், சீமைக்குப் போய் சர் ஹென்றி இர்விங் ஹாம்லெட்டாக நடித்ததை நேரிற்கண்டவர்களுள் ஒருவர்; அவர் என்னிடம் வந்து, “என் வரைக்கும், அதைவிட நீ நடித்ததே மேலாகத் தோன்றுகிறது” என்று கூறினார். இதை நான் அவருக்கு என் மீதுள்ள பிரியத்தினாற் சொல்லப்பட்டதென்றே கொள்கிறேனே யொழிய, நான் ஏற்கத்தக்க புகழாகக் கொள்ளவில்லை.

அபலையின் ஸ்மசானக் காட்சி எல்லோராலும் புகழப்பட்டதென்று கேள்விப்பட்டேன். இதற்கு முக்கியமான காரணம், ஸ்மசானத்திற்குக் கொண்டுபோன பல்லக்கு மிகவும் ஒழுங்காய்ச் சிருங்காரிக்கப்பட்டதே. இந்தப் பல்லக்கு சிருங்காரிப்பதைப் பற்றி, சர். ராமநாதன் இரண்டாவது குமாரர் மாஹேசருக்கும், ரங்கவடிவேலுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையை முன்பே குறித்திருக்கிறேன். நாடகத் தினம் சாயங்காலம் ஆறு மணிக்கு,