பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/445

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

நாடக மேடை நினைவுகள்


கிறார்கள் என்று இதை நினைத்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்வது என் வழக்கம். இதை நான் எழுதும்பொழுதும், அறுநூறு மைலுக்கப்பால் இருக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கு என் தலை வணங்குகிறேன். இதுதான் இவர்கள் செய்த உதவிக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு. இதை வாசித்தாவது, எனது நண்பர்களில் யாராவது பிறருக்கு நன்மை செய்வதே பேதை மாந்தர்களின் முக்கியக் கடன் என எண்ணுவார்களானால், நானிவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்த்தவனாவேன்.

அன்றையத் தினம் நாடகம் முடியக் காலை இரண்டு மணியாயிற்று! அதன் பிறகு, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுள் எங்களைத் தெரிந்தவர்கள் ஒருவரும் பாக்கியின்றி, உள்ளே வந்து எங்களைக் கொண்டாடினார்கள் என்று கூறுவது அதிகமாகாது. எனக்கு மிகவும் இளைப்பாயிருந்த போதிலும் அவர்களுடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டியதாயிற்று. நானும் எனது நண்பரும் இந்தத் தர்ம சங்கடத்திலிருப்பதைக் கண்ட, எங்கள் நண்பர் ராஜேந்திரர், “இப்படி வருபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், பொழுது விடிந்து போம்!” என்று சொல்லி, ரங்கவடிவேலுவையும் என்னையும், பலாத்காரமாய்த் தன் வண்டியில் அழைத்துக்கொண்டு, வீடு போய்ச் சேர்ந்தார்.

அன்றைத் தினம் நான் உறங்குமுன் எங்கள் சபையின் நற்பெயரை இலங்கைத் தீபத்திலும் பரவச் செய்த இறைவனது பெருங்கருணையைப் போற்றிவிட்டு, பிறகு நிம்மிதியாய் உறங்கினேன்.

மறு நாள் சாரங்கதர நாடகம் நடத்தினோம். அதற்கு அத்தீபத்திலுள்ள சிங்களவர்களுக்குள் தலைமை வாய்ந்த பண்டாரநாயக் என்பவர் விஜயம் செய்தார். அவருடைய முழுப் பெயர், சர் சாலமன் டையஸ், பண்டார நாயக் மஹா முதலியார்! இப்பெயரிலுள்ள விசித்திரத்தை இதை வாசிக்கும் நண்பர்கள் கவனிப்பார்களாக. சர் என்பது துரைத்தனத்தார் அவருக்கு அளித்த பட்டப் பெயர்; சாலமன் என்பது ஹீப்ரு பதம்; டையஸ் என்பது போர்த்துக்கேய வார்த்தை; பண்டார நாயக் என்பது பாலி பாஷை வார்த்தைகள்; மஹா சமஸ்