பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

நாடக மேடை நினைவுகள்


யென்பவர் இன்னொரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியில் பாதியை, இலங்கைத் தீபத்திய கவர்னர் ஏற்படுத்திய, டூபர்குலோசிஸ் வியாதி நிவாரண பண்டுக்காகக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன்பேரில் அதற்கு இசைந்தோம். என்ன நாடகம் போடுவதென்கிற கேள்வி வந்தபோது, இதுவரையில் சோகரசமும் வீரரசமும் அமைந்த நாடகங்களை இங்கு ஆடியுள்ளோம்; ஹாஸ்ய ரஸமமைந்த நாடகம் ஒன்று ஆடினால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்து, “காதலர் கண்கள்”என்பதை ஆடுவதாகத் தீர்மானித்தேன். அப்படியே அந்நாடகமாடுவதாக விளம்பரம் செய்த பிறகு, ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாடங்களைப் படிப்பதற்காக அப்புஸ்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்று, என்னைக் கேட்க நான் என்னுடன் கொண்டுபோன சில புஸ்தகங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றுள் இப்புஸ்தகம் ஒன்றேனும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? ஒரு புஸ்தகமுமில்லாமல் ஆக்டர்கள் தங்கள் பாகங்களை எப்படிப் படிப்பது? எப்படி நாடக தினம் புராம்டு செய்வது என்று மனக்கவலையுற்று, எங்கள் சிங்கள நண்பர்களுடன் இக்கஷ்டத்தைத் தெரிவித்து, ‘கொழும்பில், யாராவது அப்புஸ்தகம் படிக்க வாங்கியிருக்கிறார்களா?’ என்று பார்த்து எப்படியாவது ஒரு புஸ்தகம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, சீதையைத் தேடக் கிஷ்கிந்தைவாசிகள் நான்கு புறமும் போனது போல் அவர்களுள் சிலர் அப்பட்டணமெங்கும் சைக்கிளை போட்டுக் கொண்டு தேடிப் பார்த்தனர். மறுநாட்காலை ஒருவர் ஒரு புஸ்தகம் கிடைத்ததெனக் கொண்டு வந்தார். அப்பொழுது எனக்குண்டான சந்தோஷம் கொஞ்சமல்ல; ஆயினும் ஒரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, “ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்?” என்னும் பழமொழிபோல், அப் புஸ்தகத்தை யாருக்குக் கொடுப்பது நான்? அதன் மீது என்னுடைய ஆக்டர்களையெல்லாம் சுற்றிலும் உட்கார வைத்துக் கொண்டு, நாடகத்தைக் கடைசி வரையில் ஒரு முறை படித்துக் காட்டினேன்! அவ்வளவுதான் ஒத்திகை! அவர்களில் சிலர் இதை முன்பே ஆடியிருந்தபடியாலும், எல்லோரும் அதிசிரத்தை உடையவர்களாய் இருந்த போதிலும் நாடகமானது ஒரு குறையுமின்றி, மிகவும் நன்றாக