பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/449

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

நாடக மேடை நினைவுகள்


மூன்று வயதுடைய எனது இரண்டாவது பெண் மிகவும் அசௌக்கியமா யிருக்கிறதாயும், வைத்தியர்கள் டைபாய்ட், ந்யுமோனியா இரண்டுமே கலந்திருப்பதாகச் சந்தேகிப்பதாகவும் எனக்கு ஒரு தந்தி வந்தது! அதைப் பார்த்தும் இடி விழுந்தவன் போலானேன். சாதாரணமாக நான் பட்டணத்தை விட்டு வெளியிற்போனால் திரும்பி வருமளவும் என் மனைவி மக்களுக்குக் கடிதம் எழுதுவதில்லை; அவர்களையும் எழுதச் சொல்வதில்லை. “ஒரு சமாச்சாரமும் இல்லாவிட்டால் சுப சமாச்சாரம்தான்” என்னும் ஆங்கிலப் பழமொழியொன்றைக் கடைப்பிடித்து நடப்பவன் நான்; ஏதாவது மிகவும் முக்கியமான சமாச்சாரமாயிருந்தால்தான் எனக்கு எழுத வேண்டும் என்று என் மனைவிக்குச் சொல்லியிருந்தேன். ஆகவே, இம் மாதிரியான தந்தி வந்தவுடன் என் குழந்தை ஆபத்திலில்லாவிட்டால் எனக்குத் தந்தியனுப்பி யிருக்கமாட்டார்கள் என்று நினைக்க வேண்டியதாயிற்று.

நான் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; ஒருபுறம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கொழும்புப் பிரயாணத்தைச் சந்தோஷகரமான முடிவிற்குக் கொண்டு வந்தபின், இன்று சாயங்காலம், எங்கள் சபையைக் கௌரவப்படுத்தின சீமாட்டிகளையும் சீமான்களையும் பார்க்காமலா போகிறது என்கிற எண்ணம்; மற்றொருபுறம் என் குழந்தை மரணாவஸ்தையிலிருக்கும் பொழுது, அதன் அருகிலில்லாமலிருப்பதா? அதற்கு ஏதாவது நேரிடுமாயின், என் மனைவிக்குத் தேறுதல் சொல்லாமலிருப்பதா? என்கிற எண்ணம். உடனே ஏகாந்தமான ஓரிடத்திற் போய் உட்கார்ந்து கொண்டு, என் கண்களை மூடிக்கொண்டு கருணையங்கடவுளைத் தியானித்தேன்; அப்பொழுது, கொழும்பில் என் கடமையைச் செய்தாயது, என் சுய நன்மையைப் பார்க்கலாகாது, பட்டணம், போய் நோயாய்க் கிடக்கும் என் குழுந்தையருகில் இருக்க வேண்டியதுதான் என் கடமை என்று எனக்குத் தோன்றியது. உடனே நான் பட்டணம் வருவதாகத் தந்தி கொடுத்துவிட்டு, எனக்குத் துணையாக வருவதாக இசைந்த எம். துரைசாமி ஐயங்காருடன் அன்று சாயங்காலம் கப்பலேறி, மறுநாட்காலை தூத்துக்குடி சேர்ந்து, ரெயிலேறி மறுநாள் சென்னை வந்து சேர்ந்தேன்.