பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நாடக மேடை நினைவுகள்


பாஷையில் சில நாடகங்களைக் கற்பித்து, ஏற்கனவே சங்கீதப் பயிற்சி உடைத்தாயிருந்தபடியால், அவர்களுக் கெல்லாம் நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகள், ராமாயண பாரத கீர்த்தனை முதலிய பழைய புஸ்தகங்களிலிருந்து எடுத்தும், இல்லாதவிடத்து மேற்குறித்தபடி நூதனமான பாட்டுகளைத் தானாக வர்ணமெட்டுக்களுடன் எழுதிக் கொடுத்தும், சங்கீதப் பயிற்சியுண்டாக்கினார். தனது சொத்திலிருந்து செலவழித்து சாங்கிலி கம்பெனியாரைப் போல் நாடக உடுப்புகளும், திரைகளும் தயார் செய்தார்.

பிறகு, தான் குடியிருந்த தஞ்சாவூரில் முதல் முதல் சில நாடகங்களை ஆடி, அங்குள்ள ஜனங்களையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து, அவர்களெல்லாம் நன்றாயிருக்கிற தெனப் புகழவே, பிறகு தன் நாடகக் கம்பெனியைச் சென்னைக்கு அழைத்து வந்து செங்கான்கடைக் கொட்டகையில் நாடகங்களைத் தமிழில் நடத்த ஆரம்பித்தார். முதலில் அன்று இவரைப் பார்த்த பொழுது இவருக்கு நான் உத்தேசிக்கிறபடி சுமார் முப்பத்தைந்து முப்பத்தாறு வயதிருக்கும். கொஞ்சம் ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். பழைய காலத்தில் மஹாராஷ்டிரர்கள் தலைக்கணிந்து கொண்டிருந்த சரிகைக் குச்சுவிட்ட, சிகப்புப் பாகையொன்றை இவர் சாதாரணமாக அணிவார். மஹாராஷ்டிரராயிருந்தாலும், தமிழ் சுத்தமாகப் பேசுவார். நல்ல கம்பீரமான குரல் உடையவர். இவருக்குக் கொஞ்சம் வாத நோய் உண்டு போலும். “ஸ்திரீசாகசம்” என்னும் நாடகத்தில் அரசனுடைய மந்திரியாக நடித்தார். (இது மேற்குறித்த சூத்திரதாரனாக வந்தது அன்றி) மந்திரி வேஷத்திற்கு, ஒருவிதத்தில் பொருத்த மாயிருந்த, தன் சுய உடையுடனே வந்து விட்டார். இவர் முகத்தில் வர்ணம் பூசுவது சாதாரணமாகக் கிடையாது. அதற்கேற்ப மந்திரி, குரு முதலிய வேஷங்களையே தனக்கு ஏற்படுத்திக் கொள்வார். இப்படிப்பட வேஷங்களை இவர் தரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு; கதாநாயகனாகவும் இன்னும் பெரிய வேஷதாரியாகவும் வருவது இவருக்குக் கடினமன்று. ஆயினும் நாடகக் கதையின் கோர்வை எங்காவது விட்டுப் போனாலும், ஏதாவது நாடகப் பாத்திரம் வராமற் போனாலும் அல்லது அரங்கத்தின்மீது வருவதற்கு ஆலஸ்ய மானாலும், மந்திரி முதலிய வேஷந் தரித்து கதையின்