பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/451

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

நாடக மேடை நினைவுகள்


விழுந்த கதை போலிருக்கிறது’ என்று நகைக்கலாம். அவர்கள் அவ்வாறு எண்ணி நகைப்பது தவறு என்று நான் சொல்லமாட்டேன். ஆயினும், மேற்கூறிய என்னுடைய தீர்மானத்தினின்றும் நான் மாறமாட்டேன்!

இக் கிளைக்கதையை இதனுடன் விட்டு, இனிக் கொழும்பில் நடந்ததைப்பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் பப்ளிக் ஹாலுக்குப் போனது முதல், வந்தவர்களெல்லாம் ஒருவர் பாக்கியின்றி, ‘எங்கே மிஸ்டர் சம்பந்தம்?’ என்று வினவ, அவர்களுக்கு, நான் திடீரென்று பட்டணம் திரும்பிப் போகவேண்டி வந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்க, அனைவரும் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். அன்றியும் இரண்டு நாள் பொறுத்து, என் குழந்தை அபாயத்தினின்றும் நீங்கியது என்று என் தந்தி போய்ச் சேருமளவும் பன்முறை பட்டணத்திலிருந்து ஏதாவது சேதி வந்ததா என்று பலர் கேட்டனுப்பியதாகச் சொன்னார்கள். இவ்வாறு என் குடும்ப சுகத்தைப்பற்றிக் கேட்டவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அப்படி விசாரித்தவர்களில் நூற்றில் தொண்ணூற்றொன்பது பெயரை நான் பார்த்தவனுமன்று; ஏதோ நான் நாடக மேடையில் அவர்கள் மனத்தைச் சிறிது சந்தோஷிக்கச் செய்தது, அத்தனை பெயரையும் என்மீது அவ்வளவு ப்ரீதி கொள்ளும்படி செய்தது; நாடகமாடுவதிலும் கொஞ்சம் பலன் உண்டு என்று நான் நம்ப வேண்டியதாயிருக்கிறது.

மேற்குறித்த சந்தர்ப்பத்தினால், அக்குழந்தையைச் சில வருஷம் வரையில் “கொழும்பு குழந்தை” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். அன்றியும் இந்த அனுபவத்தை, நான் இப்போதைக்கு இரண்டு வருஷங்களுக்கு முன் எழுதிய “தாசிப்பெண்” என்னும் நாடகத்தில் கதாநாய கியாகிய மீனாட்சி மரணாவஸ்தையிலிருந்து தப்பிப்பிழைத்த காட்சியில் சற்று மாற்றி, உபயோகித்திருக்கிறேன். இக் குழந்தை பெரியவளாகி, விவாகமாகி, தெய்வக் கடாட்சத்தினால், ஒரு பெண் குழ்ந்தையைப் பெற்றிருக்கிறாள். அந்த என் பேத்திக்கு மீனாட்சி என்று பெயர் வைத்திருக்கிறேன்.