பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/452

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

437




இரண்டு மூன்று தினங்கள் பொறுத்துக் கொழும்பிலிருந்து எனது நண்பர்கள் எல்லாம் சுகமாய்ப் பட்டணம் வந்து சேர்ந்தனர். அதன் பிறகு கொஞ்ச நாளைக்கெல்லாம், கொழும்பு நகரவாசிகள், எங்கள் சபைக்குச் செய்த மரியாதையாக வெள்ளி வேலை செய்யப்பட்ட, சுமார் 500 ரூபாய் பெறும்படியான, ஒரு யானையின் விக்ரஹத்தின் முதுகின் பேரில் வைக்கப்பட்ட கண்டி நகர வேலைப் பாடுள்ள கிண்ணமும், இலங்கைத் தீவுக்கு அறிகுறியாக ஒரு வெள்ளித் தென்னைமரமும், ஒரு பெரிய வெள்ளித் தட்டும் வந்து சேர்ந்தன.

நாங்கள் கொழும்பிலிருந்த பொழுது, அங்குள்ள சில பெரிய மனிதர்கள், என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு வுக்கும், எனக்கும் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று இரண்டு பதக்கங்களைத் தயார் செய்தும் எங்கள் சபையின் சட்டங்களின்படி நாங்கள் அவைகளைப் பெறலாகாது என்று மறுத்தோம்; உங்களுக்கு விருப்பமானால் எங்கள் சபைக்குப் பொதுவாக மரியாதை செய்யலாமேயொழிய சபையின் அங்கத்தினர்க்குப் பிரத்யேகமாய் மரியாதை செய்யக்கூடாதென்று தெரிவித்தோம். இதை உத்தேசித்துத் தான் கொழும்பு நகரவாசிகள் மேற்கண்டபடி சபைக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டிய தாயிருக்கிறது. இதற்குப் பிரதியாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தார் இவ்வருஷம் கடைசியில் சென்னைக்கு வந்த பொழுது, எங்கள் சபையார் அவர்களுக்கு அலங்கார வெள்ளிக்கேடயம் ஒன்று ஞாபகார்த்தமாக அளித்தனர்.

இவ்வாறு, பலர் அசாத்தியமான காரியம் என்று கூறிய இப்பெரும் வேலையை, சந்தோஷகரமாய் முடித்ததற்கு, என்னை ஒரு சிறு கருவியாகக் கொண்ட எம்பெருமான் பேரருளைப் போற்றி, இனிமேல் நடந்த கதைகளை என் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இவ் வருஷக் கடைசியில் மாட்சிமை தங்கிய நமது ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி, மகுடம் புனைந்த கொண்டாட்டம் சென்னையில் நடந்தபொழுது, அக்கொண்டாட்டத்தின் கமிட்டி மெம்பர்கள் வேண்டுகோளின்படி ஜிம்கானா மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய கொட்டகையில்