பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/454

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

439


தீர்மானித்தேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் ஏளனம் செய்வார்களென்று இச்செய்தியை இரகசியமாய் வைத்திருந்தேன். தசராவின் முதல் தினமும் இந்த வேடம் நான் பூணுவதை மற்றவர்கள் அறியக்கூடாதென்று நினைத்து, அன்றைத் தினம் நான் வெளியூருக்கு வியாஜ்ய சம்பந்தமாகப் போவதாக வெளியிட்டுவிட்டு, அன்றைத் தினம் மத்தியானம் ஒருவருமறியாதபடி விக்டோரியா ஹாலின் மேல் மாடிக்குப்போய், ஆக்டர்கள் தவிர மற்று யாரும் நேபத்தியத்திற்குள் வரக்கூடாதென்று விளம்பரம் போட்டுவிட்டேன். இம்முறை ரங்கவடிவேலுவும், ஜெயராம் நாயகரும் எனக்கு நன்றாகத்தான் பெண் வேஷம் போட்டு வைத்தார்கள். காட்சி ஆரம்பத்தில் முதலியார்கள் வீட்டின் வழக்கம்போல், கலியாணப் பெண்ணை மங்களப் பாட்டுடன் நாதஸ்வரம் வாசிக்க, சிருங்காரித்திருந்த வீட்டின் மத்தியில் கொண்டுபோய் உட்கார வைக்க வேண்டியிருந்தது; அப்பொழுது தலைகுனிந்து, வாயைத் திறவாமல், மேடையின் மீதிருந்த நாற்காலியின்பேரில், என் தாயாராக வேடம் பூண்ட ஒரு ஆக்டர் கொண்டுபோய் உட்கார வைத்தபொழுது, என்னை இன்னானென ஒருவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்முடைய சூழ்ச்சி பலித்தது, நம்மை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, இரண்டு நிமிஷத்திற்கெல்லாம், சபையிலுள்ள அனைவரும் கொல்லென்று நகைத்துக் கை கொட்டினர்! ஓகோ! நம்மைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிந்தவனாய் அக்காட்சி முடியும் வரையில் என் தலையைத் தூக்கவில்லை நான்!

பிறகு நான் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று விசாரித்ததில், என்னுடைய தமையனார் ஆறுமுக முதலியாரால் வெளியாயது என்று கண்டேன். காட்சியின் துவக்கத்தில் அவர், அப்பொழுது ஸ்மால்காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாயிருந்து, பிறகு ஐகோர்ட்டு ஜட்ஜான கிருஷ்ணன் என்பவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாராம். நான் மேடையின் மீது உட்கார்ந்தவுடன், இது யார் புதிய ஆக்டர் என்று எல்லோரும் வினவிக் கொண்டிருக்க, மிஸ்டர் கிருஷ்ணனும், சபையின் காரியதரிசியாயிருந்த என் தமையனாரை நோக்கி, இது யார் என்று கேட்க, அவர் மெல்ல அவரிடம், “இது