பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/458

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

443


ஆகவே இவளுக்கு இந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டது என்று பதில் உரைக்கப்பட்டது. இதனால் நாடக மேடை ஏற விரும்பும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது யாதெனில், நாம் என்ன வேடம் வேண்டு மென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் நம்மில் யாருக்காவது இருந்தபோதிலும், நமக்கு ஏற்ற பாத்திரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, சரீரத்தைக் கருதியோ, சாரீரத்தைக் கருதியோ நமக்கு ஏற்றதாயிராத பாத்திரத்தை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாதென்பதேயாம். முன்பே நான் ஹரிச்சந்திரனாக நடித்தது தவறு என்று எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேன். ஒரு தெலுங்குப் பழமொழி இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது; அதைத் தமிழில் “என் வீட்டிற்கு நானே பெரியவன்; பூனைக்குப் போட்டா பெரிய நாமம்” என்று மொழி பெயர்க்கலாம். இந்தப் பழமொழிக் கிணங்க, நான் பீமசேனன் வேடம் தரித்தால் எப்படியிருக்கும்! ஆகவே, இவ் விஷயத்தை எனது நண்பர்களாகிய ஆக்டர்களும் கண்டக்டர்களும் நன்கு கவனிப்பார்களாக.

இந்த 1911ஆம் ஆண்டின் முடிவில், நான் மேற்சொன்னபடி ஹானரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் நமது தேசம் செய்த துர்ப்பாக்கியத்தால் காலகதியடைந்த பொழுது, எங்கள் சபையில் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்தது மன்றி, ஐயர் அவர்களுடைய படம் ஒன்றைச் சபையில் வைக்க வேண்டு மென்றும் தீர்மானித்தோம். சீக்கிரத்தில் 500 ரூபாய் செலவழித்து அவரது முழு உருவப்படமொன்று சபையில் வைத்தோம். அன்றியும் அவர் ஞாபகார்தத்திற்காக அவரது சிலா உருவம் ஒன்று வைப்பதற்காக ஒரு பண்டு சென்னையில் ஏற்படுத்தியபொழுது, அதற்குல் சபையின் பணத்திலிருந்து 1000 ரூபாய் கொடுத்தோம். என்ன செய்தும், அவர் எங்கள் சபைக்குச் செய்த உதவிக்காக, ஆயிரத்திலொரு பங்குகூட எங்கள் சபையின் கடனை அடைத்தவர்களாகோம் என்பது என் நிச்சயமான எண்ணம். அவர் மாத்திரம் சில வருஷங்கள் உயிரோடிருந்திருப்பா ராயின், சுகுண விலாச சபை இருப்பதற்கோர் கட்டடமும், நாடகமாடுவதற்கோர் புதிய நாடக சாலையும், என்றோ பெற்றிருக்கும்!