பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/459

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21 ஆவது அத்தியாயம்

1912ஆம் வருஷம், எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில் எங்கள் சபை இருநூறாவது நாடகமாக, நான் எழுதிய “விரும்பிய விதமே” என்னும் நாடகத்தை ஆடியதைத் தவிர, வேறு விசேஷமொன்றுமில்லை.

1913ஆம் வருஷத்தில் எங்கள் சபையில் நேரிட்ட முக்கிய சம்பவம், நாங்கள் மறுபடியும் இலங்கைக்குப் போன தேயாம். இரண்டு வருடங்களுக்கு முன் அத்தீவுக்குப் போனபொழுது, கொழும்பில் நாங்கள் நாடகமாடினதைப் பார்க்க, யாழ்ப்பாணத்திலிருந்து ஜனங்கள் வந்தனர். அவர்களில் சிலர், தங்கள் ஊருக்கு வரும்படி சபையை அழைத்தனர். அம்முறை முடியாது பிறகு ஒரு முறை இலங்கைக்கு வந்தால், யாழ்ப்பாணம் வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அன்றியும் கொழும்பில் எங்கள் நாடகங்கள் எல்லாம் முடிந்தவுடன், அவ்விடத்திய நண்பர்கள், எங்களை மறுவருஷமே வரும்படியாகக் கேட்டனர்; அது சாத்தியமல்ல, இரண்டு வருடங்கள் கழித்து வரக்கூடும் என்று சொல்லியிருந்தோம். நான் அதன்படி இவ் வருஷம் இலங்கைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள் (ஏப்ரல் மாதத்தில் என்று நினைக்கிறேன்) திடீரென்று கொழும்பு நாடகசாலை முழுதும் வாடகைக்குப் பெற்றிருந்த வாரிக் மேஜர் என்பவர், சபைக்கு வந்து என்னைக் கண்டார். இவர்தான் முந்திய முறை நாங்கள் இவருடைய நாடக சாலையைக் குடிக்கூலிக்குக் கேட்ட பொழுது, இச்சபையாருக்கு என்ன வரும்படி வரப்போகிறது, இங்குத் தமிழில் நாடகம் நடத்தினால் என்று சந்தேகித்து, 5 தினங்களின் குடிக்கூலியை முன்னதாகவே பெற்றுக் கொண்டவர். ஆயினும் இதை அவர்மீது குறையாகக் கூற வில்லை. நான் அவருடைய ஸ்தானத்தில் இருந்திருப்பேனாயின் அப்படித்தான் நானும் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல வந்த முக்கியமான அம்சம் என்னவென்றால், எங்கள் சபையின் நாடகங்களைப் பாராமுன் அவ்வாறு சந்தேகித்தவர், தனது நாடக அரங்கத்தில் நாங்கள் நாடகங்கள் போட்டபொழுது பார்க்க