பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/460

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

445


வந்த பெரும் ஜனக் கூட்டங்களைக் கண்டவராய், தானாக இவ்வருஷம் சென்னைக்கு வந்து, எங்கள் சபையைக் கொழும்புக்கு அழைத்தார்.

அவர், நீங்கள் வேறொருவருக்கும் கண்டிராக்டராக உங்கள் நாடகங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. நானே எடுத்துக் கொள்ளுகிறேன். கொழும்பு துறைமுகத்தில் நீங்கள் வந்து சேர்ந்தது முதல், மறுபடியும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பி வருகிற வரையில் நாடகங்களுக்கு வேண்டிய உங்கள் செலவையெல்லாம் நான் கொடுத்து விடுகிறேன். அன்றியும் நாடகங்களுக்கு வரும் மொத்த வரும்படியில், நூற்றிற்கு அறுபது விகிதம் உங்களுக்குக் கொடுக்கிறேன். மிகுதி நாற்பது விகிதம், நாடக அரங்கம் குடிக் கூலிக்காகவும், மற்றுமுள்ள செலவிற்காகவும் நான் எடுத்துக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பழம் நழுவிப் பாலில் விழுந்ததெனச் சந்தோஷமுடன் ஒப்புக்கொண்டு, எங்கள் சபையின் நிர்வாக சபையாரையும் ஒப்புக்கொள்ளச் செய்தேன். உடனே புறப்படுவதற்கு ஏற்பாடுகளெல்லாம் செய்து, இங்கிருந்து மே மாதம் 28ஆம் தேதி ஆக்டர்களும் ஆக்டர்களல்லாதாருமாக 43 பெயர் புறப்பட்டோம். ஒரு முறை போய் வந்தபடியால் இம்முறை ஏற்பாடுகள் செய்வது சுலபமாயிருந்தது. இம்முறை எப்படியாவது யாழ்ப்பாணத்திற்கும் போக வேண்டுமென்று தீர்மானித்தோம். கொழும்பில் வருகிறபடி யாழ்ப்பாணத்தில் வசூலாகுமோ என்னவோ என்று சந்தேகப்பட்டோம். அன்றியும் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கமே கிடையாது, கொட்டகையொன்று புதிதாய்ப் போட வேண்டுமென்று அறிந்தோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் யோசித்து, யாழ்ப்பாணத்தார் ஒருவர், யாழ்ப்பாணத்தில் நடத்தும் நாடகங்களின் செலவை யெல்லாம் தான் மேற்கொண்டு, எங்கள் ரெயில் செலவுக்கும் சாப்பாட்டுச் செலவிற்கும் மொத்தமாக ஐந்நூறு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லவே, அங்கு போவதனால் நஷ்டமில்லாமற் போனால் போதும் என்று தீர்மானித்து, அப்படியே ஒப்புக்கொண்டோம்.

இம் முறையும் இலங்கைக்கு தூத்துக்குடி வரையில் ரெயில் மார்க்கமாய்ப் போய், அங்கிருந்து ஸ்டீமர் ஏறிக்