பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/461

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

நாடக மேடை நினைவுகள்


கொழும்பு போய்ச் சேர்ந்தோம். கொழும்பில், லீலாவதி-சுலோசனா, விரும்பியவிதமே, மனோஹரன், ஹரிச்சந்திரன், நற்குல தெய்வம் என்னும் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இவைகளைப்பற்றி நான் எனது நண்பர்களுக்கு அதிகமாய் எழுத வேண்டிய நிமித்தியமில்லை. முதன்முறை நடைபெற்றதைவிட, இம்முறை நாடகங்கள் மிகவும் அழகாய் நடைபெற்றன. முதன்முறையைவிட, ஜனங்களும் அதிகமாய் வந்தனர். எங்கள் சபையின் பங்கு வரும்படியில், எங்கள் செலவெல்லாம் போக 1500 ரூபாய்க்கு மேல் மிகுந்தது. இத்தொகையை இதற்கு முந்திய வருஷம் ஸ்தாபித்த ‘கட்டட பண்டிற்கு’ச் சேர்த்தோம். இம்முறை நாங்கள் தங்கியிருப்பதற்கு வாரிக்மேஜர் என்பவர் தகுந்த வசதியெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். முதன் முறை நாங்கள் இங்குப் போனபோது எப்படிப் பரிவுடன் கொழும்புவாசிகள் எங்களுக்கு உபசரணை செய்தனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இம்முறை எங்களை நன்றறிந்தமையால் அதைவிடப் பதின்மடங்கு அதிகமாய் உபசரித்தனர் என்றே நான் சொல்லவேண்டும். காலையில் எழுந்தால், பழங்களோ, திண்பண்டங்களோ ராக்வுட் குடும்பத்தார் முதலிய நண்பர்களிடமிருந்து ஓயாது வந்துகொண்டிருக்கும்; எங்களைப் பார்க்க இரவில் நாங்கள் தூங்குகிறவரையில் சிநேகிதர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். நானும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், இரண்டு வேளை ஒன்றாய் சபை தங்கியிருந்த வீட்டில் போஜனம் கொண்டோம் என்பதில்லை; காலையில் ஒருவர் வீட்டில் விருந்து, சாயங்காலம் ஒருவர் வீட்டில் பலஹாரம், இராத்திரி ஒருவர் வீட்டில் விருந்து! சில நாட்களில் சாயங்காலம் டீ, இரண்டு மூன்று இடத்தில் சாப்பிட வேண்டிய தாயிற்று. இதை நான் ஏதோ அதிகப்படுத்திச் சொல்கிறே னென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும் படி வேண்டுகிறேன். வாஸ்தவத்தில் ஒரு நாள் எங்களிருவரையும், சாயங்கால டீக்காக மூன்று இடங்களிலும், அன்றிரவு போஜனத்திற்காக இரண்டு இடங்களிலும் அழைத் திருந்தனர்! நாங்கள் என்ன செய்வது? மிகுந்த பரிவுடன் அழைத்தவர்களுக்கு, வர மாட்டோம் என்று சொல்ல வாயெழவில்லை. ஆயினும், எப்படி இத்தனை இடங்களில்