பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/462

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

447


அவர்கள் செய்த விருந்தைச் சாப்பிடுவது? ஏதோ உடம்பு அசௌக்கியமாயிருப்பதாகச் சொல்லி, ஒவ்வோர் இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோம்! இதன் பலன் என்னவென்றால் வாஸ்தவமாகவே, நான் நோயில் விழுந்தேன்! இதன் விவரம் பிறகு எழுதுகிறேன்.

அதற்கு முன், கொழும்பில் நாங்கள் நாடகமாடிய விஷயமாக இரண்டொரு வினோத சமாச்சாரங்களை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் இலங்கைக்குப் போனபோது, எனது பால்ய சினேகிதரும் என்னுடன் பிரஸிடென்ஸி காலேஜில் படித்தவருமான கே.ஆர். சீதாராமய்யர் பி.ஏ.பி.எல். வந்திருந்தார். அச்சமயம் அவர் போலீஸ் உத்தியோகத்திலிருந்தார். எம். சுந்தரேச ஐயருக்குப் பிறகு இவர் ஆங்கிலத்தில் முக்கியமான பாகங்களை யெல்லாம் எங்கள் சபையில் ஆக்டு செய்து கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய ஒதெல்லோ முதலிய பாத்திரங்கள் ஆடுவதில் மிகவும் சமர்த்தர். கம்பீரமான ஆகிருதியையும் உடையவர். இவரை முதல் நாள் மேடையின்மீது பார்த்தது முதல், கொழும்பு நாடகப்பிரியர்கள் இவருக்கு “சாண்டோ” என்று பெயர் வைத்தார்கள்! நாடகசாலை திறக்குமுன் உள்ளே நுழைவதற்காக ஏராளமான ஜனங்கள் வெளியிற் கூடிக் கூச்சலிடுவார்கள்; அப்போது இவரை அனுப்பினால், இவர் போய், ‘கூச்சலிடக்கூடாது’ என்று இவரது கம்பீரமான குரலுடன் சொன்னால், உடனே அடங்கி விடுவார்கள். உள்ளே வந்த பிறகும், நாடகம் ஆரம்பமாவதற்கு முன், காலரியில் ஜனங்கள் வழக்கம்போல் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள்; கூச்சல் அதிகமாய்ப்போனால் இவரை உள்ளிருந்து நான் அனுப்புவேன். இவரைக் கண்டதும் ‘கப்சிப்’ என்று அடங்கி விடுவார்கள்.

இவரது முதுகு திரும்பினால் “சாண்டோ! சாண்டோ!” என்று கத்துவார்கள்! திரும்பி அவர்களைப் பார்த்தாலோ, நிசப்தமாய்ப் போய்விடும்! இவர் இரண்டு மூன்று நாடகங்களில் மேடையின்மீது தோன்றியபொழுது, காலரியில் இருந்தவர்களெல்லாம், மிகுந்த குதூஹலத்துடன் இவரை வரவேற்றனர்.