பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/464

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

449



இவ்விடத்தில் ஏற்பாட்டின்படி ஐந்து நாடகங்களையும் முடித்துக் கொண்டு, மறுநாள் காலை யாழ்ப்பாணம் பிரயாணம் புறப்படவேண்டியிருக்க, அதற்கு முந்திய தினம், வழக்கம்போல் இரண்டு மூன்று விருந்துகள் சாப்பிட்டேன். நான் அன்றிரவு நித்திரைக்குப் போகும் பொழுது எனக்கொரு மாதிரியாயிருந்தது. அதைக் கவனியாது நித்திரை போனவன், இரவு இரண்டு மணிசுமாருக்கு விழித்துக்கொள்ள, உடம்பில் ஜ்வரம் இருப்பதைக் கண்டேன். அதிகமாய்ப் புசித்ததன் பலனை அனுபவிக்கிறோம். சரிதான், இந்த ஜுரத்துடன் யாழ்ப்பாணம் போய் எப்படி நாடகமாடப் போகிறோம் என்னும் பெருங்கவலை என்னுட் புகுந்தது. காலை எழுந்தவுடன் வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொள்ளவும் நேரமில்லாமற் போயிற்று; உடனே ரெயில் ஏற வேண்டி வந்தது. வரவர ஜுரம் அதிகரித்து, அன்று பகலெல்லாம் ரெயிலில் ஒன்றும் புசியாது படுத்திருந்தேன். இந்தத் புத்தி முன்பேயிருந்து, முன்னாள் இரவு லங்ஙணம் போட்டிருந்தேனாயின், நலமாயிருந்திருக்கும். குதிரை களவுபோன பிறகு லாயத்தை மூடியது போல், ஜுரம் வந்த பிறகு ஜாக்கிரதையாயிருந்து என்ன பலன்? சாயங்காலம் இருட்டியவுடன் எங்கள் ரெயில் யாழ்ப்பாணம் போய்ச் சேர, ஸ்டேஷனில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் எங்கள் சபையோரை வரவேற்க வந்திருந்தனர். நான் வண்டியைவிட்டு இறங்கியதுதான் எனக்கு ஞாபகமிருக்கிறது; நான் உடனே மூர்ச்சையானதாகப் பிறகு எனது நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். அதன்பேரில் என்னைத் தனியாக ஒரு வண்டியில் வளர்த்தி எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருந்த விடுதிக்கு அனுப்பினார்களாம். அங்குப் போன பிறகுதான் எனக்கு மூர்ச்சை நன்றாய்த் தெளிந்தது; அப்பொழுது என் தேக ஸ்திதியைப் பற்றி எனக்கு ஒரு கவலையுமில்லை; நாம் இப்படி ஜ்வரத்துடன் இருந்தால் இவ்விடத்தில் நாடகங்கள் எப்படி ஆடுவது என்பதே பெருங் கவலையாயிருந்தது. உடனே எனது நண்பர்கள் அவ்விடத்திய சிறந்த வைத்தியர் ஒருவரை வரவழைத்து என்னைப் பரிசோதித்தவுடன் அவரை நான் ஒரு கேள்வி தான் கேட்டேன். “டாக்டர்! நாளைத்தினம் நான் நாடகமாட முடியுமா?” என்று. அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு,