பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/465

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

நாடக மேடை நினைவுகள்


“நாடகமா ஆட வேண்டும்? நான் உத்தரவு கொடுக்கும் வரையில் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்காதே!” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இனிப் பயனில்லை என்று ஈஸ்வரனைத் தியானித்துவிட்டு உறங்கினேன். நான் உறங்குங்கால் நடந்த சமாச்சாரத்தை, மறுநாள் எனது நண்பர்களிடமிருந்து கேட்டறிந்தபடி இங்கு எழுதுகிறேன்.

சபை அங்கத்தினர் இருப்பதற்காக கண்டிராக்டரால் ஏற்படுத்தப்பட்ட வசதியானது, மிகவும் சிறியதாயும் மிகவும் அசௌகர்யமானதாயும் இருந்ததாம்; வெளிக்குப் போவதற்குக்கூடப் பிரத்யேகமான இடமில்லாதிருந்ததாம்; அதன்பேரில் எனது நண்பர்களாகிய ஆக்டர்களெல்லாம் ஒருங்குகூடி, “சம்பந்தத்திற்கோ உடம்பு மிகவும் அசௌக்கியமாயிருக்கிறது; நாம் இருப்பதற்குக்கூட வீடு சரியாயில்லை; இப்படிப்பட்ட கண்டிராக்டர் நமக்கு மற்ற சௌகர்யங்களையெல்லாம் சரியாகப் பார்ப்பான் என்பது மிகவும் சந்தேகமான விஷயம்; ஆகவே, ஆட்டங்களை நிறுத்திவிட்டு, கண்டிராக்டர் கொடுத்த தொகையை அவனுக்கு வாபஸ் செய்து விட்டு, நாளை ஒரு நாள் தங்கி, மறுநாள் நாம் திரும்பிப் போவோம்” என்று தீர்மானித்தாார்களாம். இப்படித் தீர்மானிப்பதற்கு முதன்மையாயிருந்த எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள், உடனே சபையின் நிர்வாக சபை மெம்பர்களுக்கு, மேற்கண்ட விஷயங்களை யெல்லாம் எழுதி, மற்றவர்களைக் கையொப்பமிடச் செய்து அனுப்பினாராம். அது சபையின் வைஸ் பிரஸிடெண்டாக இருந்த வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு வந்து சேர, அதன்பேரில் அவர், “நீங்கள் சொல்வதென்னமோ வாஸ்தவம்தான். ஆயினும், நான் அவசரப்பட்டு ஒன்றுஞ் செய்யலாகாது. சம்பந்தத்திற்கு 102 டிக்ரிக்கு மேல் ஜ்வரம் இருக்கிறது; இப்பொழுதுதான் மறுபடியும் டாக்டர் வந்து போனார். அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனது தூக்கத்தை இப்பொழுது கலைப்பது சரியல்ல. பொழுது விடிந்தவுடன் நாளை எல்லாவற்றையும் சாவகாசமாய்த் தீர்மானிப்போம்” என்று அக் காகிதத்தின் மீது பதில் எழுதித் தெரிவித்தார். (இக்காகிதம் இன்னும் எங்கள் சபையில் இருக்க வேண்டும்.)