பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/466

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

451



மறுநாள் காலையில் விழித்தவுடன் நிர்வாக சபையின் சப்கமிட்டி மெம்பர்களெல்லாம் என் படுக்கையைச்சுற்றி உட்கார்ந்திருந்தனர்! நான் என்ன சமாச்சாரம் என்று விசாரிக்க, மேலே குறித்த சமாச்சாரங்களை யெல்லாம் எனக்குத் தெரிவித்தனர். அதன்மீது நானும் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து, என் அசௌக்கியத்தையும் கருதி, அப்படியே செய்யலாமென்று ஒப்புக்கொண்டேன். உடனே இரண்டொரு மணி நேரத்திற்கெல்லாம், சுகுண விலாச சபையார் இங்கே நாடகமாடப்போகிறதில்லையாம்; அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று, அவர்கள் கோபங்கொண்டு பட்டணம் திரும்பிப் போகிறார்களாம் என்று வதந்தி பரவிவிட்டது. இவ்வதந்தி, அச்சமயம் யாழ்ப்பாணத்தில் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருந்த மிஸ்டர் பின்டோ என்பவருக்கும் எட்டியது. இவர் என்னுடன் நான்கு வருஷம் பிரசிடென்சி காலேஜில் ஒன்றாய்ப் படித்தவர். இந்நான்கு வருஷங்களும் நாங்கள் மிகுந்த சினேகிதர்களாய் இருந்தோம். பிறகு அவர் சென்னையை விட்டுச் சிலோன் சிவில் சர்வீஸ் பரீட்சையில் தேறினவராய், இலங்கையில் உத்யோகத்தில் அமர்ந்தார். தெய்வாதீனத்தால் நாங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போனபோது அங்கு ஜட்ஜ் வேலையிலிருந்தார். இவரை விட்டுப் பிரிந்து 20 வருடங்களுக்கு மேலாயிற்று. இவர் என்னை மறவாதவராய், நான் யாழ்ப்பாணம் வந்திருக்கும் சமாச்சாரத்தையும் சுகுண விலாச சபையார் நாடகமாடாது திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானித்ததையும் அறிந்தவராய், காலையில் கோர்ட்டுக்குப் போனவர், உடனே ஒரு மணி நேரம் கோர்ட்டு வேலையை நிறுத்தி வைத்து, தன் அறைக்குள் போய், கோர்ட்டிலுள்ள அட்வொகேட்டுகளையெல்லாம் வரவழைத்தனராம். அவர்களில் ஒருவர் எனக்குப் பிறகு, நேராகக் கூறிய சமாச்சாரத்தை இங்கு எழுதுகிறேன். அவர்களை நோக்கி, “நடந்த சமாச்சாரம் எல்லாம் நான் கேள்விப்பட்டேன். எனது நண்பர் மிஸ்டர் பி. சம்பந்தம் மிகவும் அசௌக்கியமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அக்காரணத்தினால் சுகுண விலாச சபையார், நாடகங்கள் ஆடாது நிறுத்துவதனால் நிறுத்தட்டும்; அதற்கு நாம் தடை