பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/467

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

நாடக மேடை நினைவுகள்


சொல்லக்கூடாது. ஆயினும் அந்தச் சபையார், யாழ்ப்பாணத்தாராகிய நாம் அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று கோபத்துடன் திரும்பிப் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவேண்டியது உங்கள் கடமை. அதற்காக என்ன செலவானாலும் சரி; நான் பொறுப்பாயிருக்கிறேன்” என்று சொல்லி, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி அவர்களிடம் கொடுத்தாராம். அதன் பேரில் அவர்களெல்லாம், ரூபாய் ஒன்றும் வேண்டியதில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி அந்தச் செக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உடனே சபையார் தங்கியிருந்த சிறு வீட்டண்டை வந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியவர்களை வரவழைத்து, “நீங்கள் ஆட்டம் ஆடாமற் போனாற் போகிறது, நீங்கள் எத்தனை தினம் இங்கு இருப்பதாக முன்பு தீர்மானித்தீர்களோ, அத்தனை நாள் இவ்வூரில் எங்கள் விருந்தினர்களாயிருந்து, பிறகுதான் போக வேண்டும். உங்களுக்குத் தக்கபடி உபசரணை செய்யவில்லையென்று சொன்னால், அது யாழ்ப்பாணவாசிகளாகிய எங்களுக்குப் பெருத்த அவமானமாகும். கண்டிராக்டர் கிடக்கட்டும்; உங்களுக்கு என்னென்ன சௌகர்யங்கள் வேண்டுமோ சொல்லுங்கள்; அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தெரிவித்தார்களாம். இவ்வாறு அவர்களெல்லாம் மிகவும் வற்புறுத்தவே, எனது நண்பர்கள் அதற்கிசைந்து, “எங்களுக்கு வேறொன்றும் வேண்டிய தில்லை; முக்கியமாக நாங்கள் தங்கியிருப்பதற்கு ஒரு சௌகர்யமான வீடு வேண்டும்” என்று சொல்ல, “இந்தப் பட்டணத்தில் காலியாயிருக்கும் வீடுகளில் உங்களுக்கு எது வேண்டுமோ பார்த்துச் சொல்லுங்கள்; அதை உங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று தெரிவித்தார்களாம். அதன் பேரில் சபையார், “நீங்கள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்ல, அந்தத் தெருவிலேயே காலியாயிருந்த ஒரு பெரிய வீட்டை உடனே ஏற்பாடு செய்து, சபையார் அங்குத் தங்கியிருப்பதற்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் அமைத்து, வேறொன்றும் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் அந்த வீடு நிரம்ப, நாற்காலிகள், மேஜைகள்,