பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/468

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

453


சோபாக்கள் போட்டு, பால், தயிர், நெய், பதார்த்தங்களால் நிரப்பிவிட்டார்களாம்! இதைப்பற்றி இரண்டு நாள் கழித்து எனக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியமானவுடன் நான் இவ்விடம் போய்ப் பார்த்தபொழுது, கண்டதைப் பிறகு எழுதுகிறேன்.

இவைகளையெல்லாம் செய்ததுமன்றி, எனக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருடன், யாழ்ப்பாணத்தில் சிறந்த பெரிய வைத்தியரையும் அழைத்துக்கொண்டு, மத்தியானம் சுமார் இரண்டு மணிக்குமேல் என்னை வந்து கண்டனர். அந்த இரண்டு வைத்தியர்களும் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, ஜ்வரம் கொஞ்சம் குறைவதாகக் கண்டு, நாளைக்குச் சரியாகப் போய்விடும் என்று சொன்னார்கள். இதுதான் சாக்கென்று, “ஆனால் நாளை இரவு நான் நாடகம் ஆட முடியுமா?” என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு எனது முதல் வைத்தியர், “எல்லாம் நாளைத் தினம் காலை வந்து பார்த்துச் சொல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பதில் உரைத்தார். பிறகு சாயங்காலத் திற்கெல்லாம், நான் கணக்குப் பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வந்த மருந்தினாலோ, என்ன காரணத்தினாலோ, ஜ்வரம் என்னை விட்டு, ஏறக்குறைய என் தேக உஷ்ணம் நார்மல் ஸ்திதிக்கு வரவே, அதைக் கண்ட எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மெல்ல என்னிடம் வந்து, “நாளைத்தினம், ஒரு சிறிய நாடகம் வைத்துக்கொள்ளலாமே? லீலாவதி- சுலோசனா முதலிய பெரிய நாடகங்கள் ஆடுவதென்றால் உங்களால் முடியாது, ‘காலவ ரிஷி’ சிறிய நாடகம், அதில் உங்களுக்குக் கடைசி இரண்டு காட்சிகளில் தானே வேலையிருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்க எனது நண்பர் இவ்விடம் நாடகமாட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார் என்று கண்டவனாய், அதற்கிசைந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எனது தமைய னார் ஆறுமுக முதலியார் முதலியவர்களை அழைத்து, “நாளை இரவு ‘காலவ ரிஷி’ வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். அவர்களும், எனக்கு உடம்பு சௌக்கிய மாகி வருவதைக் கேட்டு, சந்தோஷப்பட்டவர்களாகி, குதூகலத்துடன் “அப்படியே செய்யலாம்” என்று சொல்லி, அதற்காக உடனே ஏற்பாடு செய்யும்படி கண்டிராக்ட ருக்குத் தெரிவித்தார்கள்.