பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/469

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

நாடக மேடை நினைவுகள்




மறுநாட்காலை என் வைத்தியர் என்னிடம் வந்து பரிசோதித்துப் பார்த்து ஜ்வரம் விட்டு விட்டது; ஆயினும் மிகவும் பலனவீமாயிருக்கிறது; ஆகவே நீ நாடகம் ஆடக்கூடாது” என்றார்! அதன் பேரில், அவரிடம் நான் நாடகம் ஆடாவிட்டால், நாடகமே நின்றுவிடும். ஆகவே, எப்படியாவது எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுங்கள்; நான் என்ன மருந்து வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன் என்று மன்றாடினேன். அதன்மீது அவர் “நான் சொல்லுகிற நிபந்தனைகளுக்கெல்லாம் உட்பட்டால் உனக்கு உத்தரவு கொடுக்கிறேன்” என்றார். நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். எனக்கு உத்தரவு மாத்திரம் கொடுத்தால் போதுமெனக் கூற, “உன் பாகம் பன்னிரண்டு மணிக்குத்தான் வருமென்கிறாயே, ஆகவே, பதினோறு மணிவரையில் இங்குதானிருக்க வேண்டும்; அது வரையில் மருந்து மணிப்பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும்; பதினோரு மணிக்கு உன் படுக்கையுடன் நாடக சாலைக்குக் கொண்டு போகச் செய்ய வேண்டும்; உன் உடம்பைக் கொஞ்சமேனும் அலட்டிக் கொள்ளக் கூடாது” என்று சொன்னார். எல்லாவற்றிற்கும் அப்படியே ஆகட்டும் என்று தலை அசைத்தேன். எதற்கும் நான் சாயங்காலம் வந்து பார்த்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். வைத்தியர் இவ்வாறு உத்தரவு கொடுத்த பிறகு தான், யாழ்ப்பாணம் வந்தபிறகு முதல் முதல் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முகத்தில் சந்தோஷக்குறி தோன்றியது! யாழ்ப்பாணத்தில் எப்படியாவது தான் நாடகம் ஆடிக் கொழும்பில் பெயரெடுத்தது போல் இங்கும் எடுக்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை கொண்டிருந்தார் அவர்!

அன்றைத் தினம் சாயங்காலம் எங்கள் சபையின் வழக்கம்போல் ஐந்து மணிக்கெல்லாம் ஆக்டர்களெல்லாம் சாப்பிட்டு விட்டு, வேடம் பூணுவதற்காக நாடகக் கொட்டகைக்குப் போய்விட்டனர். என்னடா கஷ்டம்! நாம் மாத்திரம் இங்கு தனியாக ஜெயிலில் அடைப்பட்டிருப்பதுபோல இருக்கி வேண்டி வந்ததே என்று மூக்கால் அழுதுகொண்டிருந்தேன். ஆறு, ஏழு, எட்டு மணிவரை பொறுத்துப் பார்த்தேன். அப்புறம் என்னால் பொறுக்க முடியாது, மெல்ல ஒரு ஆளை கண்டிராக்டர் வீட்டிற்கனுப்பி, எனக்கு நன்றாய் முழுவதும்