பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/470

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

455


மூடப்பட்ட ஒரு கோச்சு வண்டியைக் கொண்டுவரச் சொல்லி, அதில் ஏறிக்கொண்டு இரகசியமாய் நாடகக் கொட்டகையின் பின்பக்கமாக, எனது நண்பர்கள் வேஷம் பூணும் அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். நான் உள்ளே பிரவேசித்தவுடன் எனது நண்பர்களெல்லாம், நான் வந்து விட்டேனென்று சந்தோஷத்தினால் ஆரவாரித்தனர். இந்த சப்தம் வெளியிற் கேட்க, நாடகம் பார்ப்பதற்காக அங்கு உட்கார்ந்திருந்த என் வைத்தியர் “எதற்காக இக் கூச்சல்?” என்று கேட்டறிந்தவராய், உள்ளே விரைந்து வந்து என்னைப் பார்த்து மிகுந்த கோபத்துடன், “உன்னை யார் இதற்குள்ளாக வரச்சொன்னது?” என்று கேட்டார். நான் “டாக்டர், என் மீது கோபம் கொள்ளாதீர்கள்! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். பிறகு என்மீது கோபம் கொள்ளவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே செய்யுங்கள். எனது நண்பர்களெல்லாம் இங்கிருக்கும் போது, என்னால் வீட்டிலடைபட்டிருக்க முடியவில்லை; இந்த ஏக்கத்துடன் அங்கு இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் தங்கியிருந்தேனாயின், இதனாலேயே, போன ஜ்வரம் திரும்பி வரும் போலிருந்தது; ஆகவே, மெல்ல, முற்றிலும் மூடிய வண்டியொன்றில் ஏறி வந்துவிட்டேன்! என்னை மன்னியுங்கள்!” என்று பதில் சொன்னேன்.

அவர் என்னை மறுபடியும் பரிசோதித்துப் பார்த்து, “ஜ்வரம் எல்லாம் ஒன்றும் இல்லை ; ஆயினும் மிகவும் பலஹீனமாயிருக்கிறது; உன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்; ஒருவேளை மறுபடியும் உனக்கு ஜ்வரம் வந்தால், இன்னும் இரண்டு நாடகங்களில் நீ எப்படி ஆடக்கூடும்? நாங்களும் உன் ஆட்டத்தைப் பார்க்க முடியாதே; அதற்காகத்தான் சொன்னேன்; இப்பொழுதாவது நான் சொல்லுகிறபடி கேள். இந்த சோபாவின்மீது படுத்துக்கொள். உன் பாகம் வருகிறவரையில் அதை விட்டு எழுந்திருக்காதே; உன் வைத்தியர் உத்தரவை நீ மீறலாகாது” என்று சொல்லி விட்டுப் போனார்.

அவர் வெளியே போனதும், அந்த சோபாவை சைட் படுதா பக்கமாகக் கொண்டுபோய்ப் போடச்சொல்லி, மேடையில் நடப்பதையெல்லாம் பார்க்க வேண்டி அங்கு