பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/472

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

457


காட்சி இந்திரன் சபையாகும். அதில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு, அப்சர ஸ்திரீயாக நாட்டியமாட வேண்டியிருந்தது. அரங்கத்தில் பரப்பப்பட்ட மாம்பலகைகள் ஒழுங்காய்க்கூட இல்லை; ஒன்றின் மேலொன்றாய் வைத்துக் கட்டப்பட்டிருந்தது! இதைக் கண்டு அவர், ‘இம்மேடை யின் மீது நான் எப்படி நடனம் செய்வது?’ என்று ஆட்சேபிக்க, அதன் மீது வைக்கோலைக் கொண்டுவந்து பரப்பி, அதன்பேரில் கோணிகளைப் பரப்பிவைத்தார் கண்டிராக்டர்! இதன்மேல் நின்று எனது நண்பர், தடுக்கிக் கீழே விழாமல், அன்றிரவு, கால்மணி சாவகாஸத்திற்கு மேல் எப்படி நர்த்தனம் செய்தனர் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அன்றியும் அரங்கத்தில் வெளிச்சம் போதாமலிருந்தது; இன்னும் இப்படிப்பட்ட பல கஷ்டங்களிலிருந்தன; இருந்த போதிலும் நாடகமென்னவோ நன்றாய் நடிக்கப்பட்டு, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென நான் சொல்ல வேண்டும். மற்ற பக்க உதவி எவ்வளவு ஆபாசமாயிருந்தாலும், நடிப்பவர்கள் முழுமனத்துடனும் குதூஹலத்துடனும் சரியாக நடித்ததால், அக்குறைகளையெல்லாம் மறக்கடித்து, சபையோரைக் களிக்கச் செய்யும் என்பதனுண்மையை இம்மேடையில்தான் கண்டேன்.

சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் நான் நடிக்க வேண்டிய இரண்டு கடைசிக் காட்சிகள் வந்தன. முதல் முதல் ஏதாவது புதிய நாடகத்தில் ஆடுவதென்றாலும், அல்லது முதன் முதல் ஒரு புதிய ஊரில் ஆடுவதென்றாலும் எனக்குக் கொஞ்சம் பயமுண்டு என்று எனது நண்பர்களுக்கு நான் முன்பே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் வர வேண்டிய காட்சி வந்தவுடன், மேற்சொன்ன பயத்தினாலும், ஜ்வரம் கண்டிருந்த தேகத்தின் பலஹீனத்னாலும், என் மார்பு படபடவென்று துடிக்க ஆரம்பித்தது; அதை மெல்லச் சமாளித்துக் கொண்டு இந் நாடகத்தில் ஆடும்படியாக இவ்வளவாவது கருணை புரிந்தாரே ஈசன் என்று அவரை மனத்திற்குள் போற்றிவிட்டு, என் பாகத்தை ஆரம்பித்தேன். நான் அரங்கத்தில் தோன்றுமுன், உள்ளிருந்து, சுபத்திரை அறியும்படியாக, அர்ஜுனனாகிய என் குரலைக் காட்ட வேண்டியிருக்கிறது. என் வழக்கப்படி,