பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

459


சந்தோஷித்தபொழுதே, அதன் மஹிமையை அறிந்தேன்! சில்பி ஒருவன் ஏதோ தன் மனம் போனபடி ஏதோ சிலையைச் செதுக்கி விடுகிறான்; மற்றவர்கள் அதைப் பார்த்து, அதிலுள்ள ஒரு விசித்திரமான வேலையைக் கண்டு சந்தோஷிக்கும் போதுதான், அவனுக்கும் அதன் அழகு தெரிகிறது! இந்த அர்ஜுன வேடம் நான் பன்முறை பூண்டு, பல நாடக மேடைகளின்மீது ஆடியிருக்கிறேன்; இது நான் முன்பே கூறியபடி சிறிய பாகம், அர்ஜுனன் அரங்கத்தில் தோன்றும் காலம் முதல் 10 நிமிஷத்திற்கெல்லாம் நாடகம் முடிந்து போகிறது. ஆயினும் இந்த ஒரு பதத்தைச் சரியாக நடிப்பதற்காக, இவ்வளவு வயதாகியும், இந்த வேடம் பூண விரும்புகிறேன்.

இதை ஒரு ‘கட்டம்’ என்று நான் கூறியதற்குக் காரணம், இவ்வேடம் பூணும் ஒவ்வொரு ஆக்டரும் இக்காட்சியில் இப்பதத்தைச் சரியாகச் சொல்லுகிறானா இல்லையா என்று பார்க்க வேண்டியிருப்பதனால்தான். இதைச் சரியாகச் சொல்லிச் சபையோரின் மனத்தைச் சந்தோஷப்படுத்தினால் ஆச்சுது; இல்லாவிட்டால், இப்பாத்திரத்தை அந்த வேஷதாரி கொலை செய்தான் என்றே கூற வேண்டும். இதைப்பற்றி நான் இவ்வளவு விரிவாக எழுதியதற்குக் காரணம், இந்நாடகமானது மிகவும் அதிகமாக ஆமெடூர் சபைகளினாலும், நாடகக் கம்பெனிகளினாலும் பன்முறை ஆடப்பட்டு, இந்த இடத்தில் அந்த வேஷதாரி ரசாபாசம் செய்ததை நான் பன்முறை கண்டு வருந்தியிருக்கிறேன்; ஆகவே, இனி மேலாவது எனது இந்த நாடகத்தில் அர்ஜுனன் வேஷந்தரிக்க விரும்புவோர் இதைக் கவனித்து இந்தக் கட்டத்தில் தக்கபடி நடிப்பார்களாக.

நாடகம் முடிந்த க்ஷணமே, என் டாக்டர் உள்ளே வந்து உடனே என்னைக் கம்பளிப் போர்வை ஒன்றைப் போர்த்துக்கொள்ளச் சொல்லி, ‘வீட்டிற்குப் போய் வேஷத்தைக் கழுவிப் படுத்துக்கொள்; இங்கே வெந்நீர் கிடையாது!’ என்று சொல்லி, நான் வந்த வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டார். என் சொந்த பந்துக்களும் எனக்காக அவ்வளவு அன்பு பாராட்டுவார்களோ என்னவோ?

நான் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு, வெந்நீர் கொண்டுவரச் சொல்லி, என் முகத்திலிருந்த