பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/475

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

நாடக மேடை நினைவுகள்


வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்தபொழுது, நடந்த ஒரு சிறு வேடிக்கையை இங்கு எழுதுகிறேன். நோயுடன் இருந்த எனக்கு, வேண்டிய வேலைகளைச் செய்துகொண்டு என் பக்கத்திலேயே இருக்கும்படி எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், பத்துப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு யாழ்ப்பாணத்துப் பையனை ஏற்பாடு செய்திருந்தார். அவன் நான் வந்தது முதல் படுத்த படுக்கையாய் ஜ்வரத்திலிருந்ததைக் கண்டவன்; நான் முகத்திலிருந்த வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வனாய், “எசமாங்கூட வேஷமா பொட்டுச்சி!” என்று, தன் கண் விழிமலரக் கேட்டான்! படுக்கையை விட்டு எழுந்திராத இந்த ஆசாமி எப்படி நாடகத்தில் ஆடினான் என்று ஆச்சரியப்பட்டான் என்பது திண்ணம். இவன் ஆச்சரியப்பட்டதுமன்றி, அந்நாடகத்தில் வந்திருந்தவர்களிற் பலர், (என்னை நேராக அறிந்த சிலர் தவிர) நான் ஆடவில்லை யென்று நினைத்தனர்களாம். அதற்கு ஒரு திருஷ்டாந்தம் இங்கு எழுதுகிறேன்.

அதைப்பற்றி எழுது முன், ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். நான் எழுதி வரும் இந்த “நாடக மேடை நினைவுகள்” வாரந்தோறும் படித்து வரும் எனது சில நண்பர்கள், ‘அநேக வருடங்களுக்கு முன் நடந்த இந்தச் சமாச்சாரங்களெல்லாம் உனக்கு எப்படி ஞாபகமிருக்கிறது?’ என என்னை வினவுகிறார்கள். அவர்களுக்கு விடை கொடுக்க விரும்புகிறேன். முதலாவது, மனிதனுக்கு நாற்பது வயதுக்குமேல் ஞாபக சக்தி குறைந்து வருகிறதென்பது உன்மையாயினும், அநேக வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளெல்லாம் ஞாபகமிருக்கும்; சற்று முன்பாக நடந்தது தான் மறந்து போகிறது; இது சகஜம். இரண்டாவது, ஒரு மனிதனுடைய ஞாபகத்தில் சில விஷயங்கள் என்றும் மறக்காதபடி பதிந்து போகின்றன. எனது நாடக மேடை அனுபவங்கள் என் மனத்தில் நன்றாய் மறக்கக் கூடாதபடி பதிந்து போய்விட்டன என்பதற்கு ஐயமில்லை. மூன்றாவது காரணம் எங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த நாள் முதல் அதைச் சார்ந்த எல்லாக் காகிதங்களையும் பத்திரமாக அடக்கம் செய்து வைத்திருக்கிறேன். அது இப்பொழுது, அநேக விருத்தாந்தங்களின் தேதி முதலியவற்றைக்