பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/478

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

463


திரும்பிப் பார்க்க, அவர்களுள் ஒருவன் மெல்ல எங்கள் அருகில் வந்து, “ஐயா எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை ஒரு கேள்வி கேட்கலாமோ? என்று நயத்துடன் கேட்க, “சுகமாய்க் கேட்கலாம” என்று நாங்கள் பதில் உரைத்தோம். அதன்மீது அவன் “நீங்கள் சுகுண விலாச சபையைச் சார்ந்தவர்கள்தானே? நேற்றைத் தினம் இரவு நாடகத்தில், இதோ என்னுடன் வந்த எனது நண்பர், ‘சம்பந்த முதலியார் ஆடவில்லை யென்கிறார்; நான் ஆடினார்,’ என்று சொல்லுகிறேன்; எங்களில் யார் கூறுவது சரியென்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்றான். அதன்மீது நான் “நீங்கள் கூறினதுதான் சரி” என்று சொல்ல, அம்மனிதன் போகுமுன் இரண்டு மூன்று முறை என்னை உற்று உற்றுப் பார்த்து விட்டுப் போகப் புறப்பட, எனது நண்பர் சி. ரங்கவடிவேலு நகைத்து விட்டார். அதன் பேரில், “நான்தான் சம்பந்தம்” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதன் “மிகவும் சந்தோஷம்; நானும் அப்படித்தான் சந்தேகித்தேன்; ஆயினும், எப்படி நேராகக் கேட்பது என்று சங்கோசப்பட்டேன். மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி விடைபெற்றுப் போனான்.

மறுநாள், “சாரங்கதர நாடகம்” வைத்துக் கொண்டோம். சித்ராங்கியாக நடிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. நாடக மேடைக்குக் கோணியை எடுத்துவிட்டு ஒரு ஜமக்காளம் போட்டார்கள். வெளிச்சங்களும் முதல் நாளிருந்ததைவிட நன்றாக அமைக்கப்பட்டன. கொட்டகையில் இடமில்லாதபடி நிறைந்திருந்த ஜனங்கள், ஆதி முதல் அந்தம் வரையில் நாடகத்தைப் பார்த்துச் சந்தோஷித்தனர் என்று சொல்வது அதிகமாகாது. சித்ராங்கியின் பாத்திரத்திற்குப் பிறகு, சுந்தரகன் மதுரகவி வேடங்கள் சபையோரை மிகவும் சந்தோஷிக்கச் செய்தன. நானும், முதல் நாடகத்தில் நமக்குள்ள கொஞ்சம் திறமையைக் காட்ட முடியாமற் போயிற்றே என்று? இந்நாடகத்திலாவது சுத்தமான தமிழ் பாஷைக்கு ஓர் அடைக்கல ஸ்தானமாக நிற்கும் யாழ்ப்பாணத்தில் அதைக் காட்ட வேண்டுமென்று விரும்பினவனாய், நன்றாய் நடிக்க