பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

33


இப்பொழுதும் வழங்குகின்ற முக்கியமான வேஷங்கள் கொடுக்கப்பட்டன; அதாவது நாடகங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக வருவார்; ஆயினும் இவரது வசனமும், மேற்கொண்ட பாத்திரங்களுக்குத் தக்கபடி நடிப்பதும் என் மனத்திற்கு எப்பொழுதும் திருப்தியைத் தரவில்லை. இவர் கோவிந்தசாமி ராவினுடைய கம்பெனியை விட்டு விலகி சீக்கிரம் வேறொரு நாடக சபை ஏற்படுத்தி ஆடி வந்தார், சில வருஷங்கள். இவரை நான் சில வருஷங்களுக்குப் பிற்காலம் பார்த்தபொழுது வறுமையடைந்தவராகி நோயாளியாய், நாடக சபையில் டிக்கட்டுகள் சரிபார்க்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்! இவரது நடவடிக்கையே இவரை அந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்துவிட்டது போலும்.

சுந்தர ராவ் என்பவர் சாதாரணமாக அக்கம்பெனியின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரிப்பவர். நல்ல சாரீரமும் சங்கீத ஞானமும் வாய்ந்தவர். இவர் மேடையில் நின்று பாடும் பொழுதெல்லாம் ஜனங்கள் நிசப்தமாய்க் கேட்பார்கள். சிறிது கருமை நிறம் வாய்ந்தவராக இருந்தபோதிலும் ஸ்திரீ வேஷம் தரித்தால் பொருந்தியதாகவே யிருக்கும். இவரை நான் முதன் முதல் பார்த்தபொழுது ஒத்தை நாடியுடையவராயிருந்த போதிலும் நாளடைவில் ஸ்தூல சரீரமுடையவாராய் ஆகிவிட்டார். அவ்வளவாகியும், ஸ்திரீ வேஷம் பூணுங்கால் இவரது நடையுடை பாவனைகளெல்லாம் ஏற்றதாகவே யிருந்தன. இவரும் கொஞ்ச காலம் பொறுத்து தனியாக வேறொரு நாடகக் கம்பெனி ஏற்படுத்தினார். கோவிந்தசாமி ராவ் க்ஷணதசையை யடைந்தபிறகு, தன் மாணாக்கனாகிய இந்த சுந்தரராவ் கம்பெனியில் தானே ஒரு வேஷதாரியாக நடித்தார்! ஊழிற் பெருவலி யாவுள?

அன்றிரவு என்முன் நாடகமாடியவர்களுள் என் மனதைக் கவர்ந்தவர் குப்பண்ணராவே. இவருக்கு சற்றேறக்குறைய பாடவே தெரியாது. ஆயினும் வசனத்தில் மற்றெல்லோரை யும்விட மேம்பட்டிருந்தார். இவர் அன்று ராஜகுமாரனுடைய முதன் மனைவியாக நடித்தது இப்பொழுதும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. இவர் துன்மார்க்கமுடைய ஸ்திரீயாக நடிப்பதில் மிகுந்த நிபுணர்.

இக்கம்பெனியில் தாரை, சித்ராங்கி முதலிய வேஷங்களை இவர்தான் தரிப்பார். ஸ்திரீகளுடைய நடவடிக்கைகளை