பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/481

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

நாடக மேடை நினைவுகள்


கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒருவர்தான் பாக்கி. நீங்கள் சம்மதித்தால் உடனே ஏற்பாடு செய்து விடுகிறோம்” என்று சொன்னார்கள்.

நான் மெல்ல என் தலையைத் திருப்பி ரங்கவடிவேலு வைப் பார்த்தேன். என்னுயிர் நண்பனது புன்னகையினால் தனக்கு இது மிகவும் விருப்பமென்றும், இந்நாடகத்தைப் போடலாமென்று யுத்தி சொல்லிக் கொடுத்தது தான் தானென்றும் கண்டேன். அதன்மீது இதென்னடா தர்ம சங்கட மாய் வந்திருக்கிறது என்று சற்று. யோசித்து, “நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதற்காக நீங்கள் எல்லோரும் மன்னிக்க வேண்டும்; என்னுடைய பழைய வைத்தியரை வரவழையுங்கள். அவர் என் ஹிருதயத்தைப் பரீட்சித்துப் பார்த்து, இன்றிரவு நான் அத்தனை பெரிய நாடகமொன்றில் நடிக்கலாம் என்று பயமில்லாமல் சொல்வாராயின், எனக்கு ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அதன் பேரில், அவர்கள் ஒரு வைத்தியருக்கு இரண்டு வைத்தியர்களாகத் தருவிக்கிறோம் என்று சொல்லி, உடனே வண்டியனுப்பி என் பழைய வைத்தியரையும், இன்னும் அந்த ஊரில் ஹிருதய பரீட்சையில் மிகச் சிறந்தவரெனப் பெயர் பெற்ற மற்றொருவரையும், சில நிமிஷங்களுக்குள் வரவழைத்தார்கள். அவர்களிருவரும், எனது சபை அங்கத்தினராகிய டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச் சாரியும் மூவருமாகக் கூடி என் ஹிருதயத்தைப் பரிசோதித்துப் பார்த்து, கொஞ்சம்பலஹீனமாகத்தானிருக்கிறது; இருந்தபோதிலும், இன்றிரவு நாடகம் நடிக்கலாம், அபாயமொன்றுமில்லை என்று தீர்மானம் சொன்னார்கள். இப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்த்த இம் மார்க்கமும் அடைபட்டுப் போகவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். ஆயினும், ஒரு வார்த்தை கூறினேன். “எல்லாம் சரிதான். இந்த கண்டிராக்டர், எங்கள் சபை நான்கு ஆட்டங்கள் ஆட வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்; எனது தேகஸ்திதியைக் கருதி மூன்று நாடகங்கள் ஆடினால் போதும் என்று இசைந்தார். இப்பொழுது அந்த ஆள், இதற்கு ஒரு ஆட்சேபணையும் செய்யாமல் பாருங்கள்” என்று சொன்னேன். அதை யெல்லாம் நாங்கள் சரிப்படுத்தி விடுகிறோம், நீங்கள் இசைந்தது போதுமென்று