பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/482

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

467


சொல்லி விட்டு, அவர்கள் அனைவரும் நாடகத்திற்காக வேண்டிய விளம்பரங்களைச் செய்ய உடனே மிகுந்த குதூகலத்துடன் புறப்பட்டுப் போயினர். அப்பொழுது சுமார் 11 மணி ஆகிவிட்டது. இன்னும் சாயங்காலத்திற்குள்ளாக நாடகத்தைப் பற்றி இவர்கள் என்ன அச்சிட்டு விளம்பரம் செய்யக்கூடும் என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு, நான் அறிந்தபடி அவர்கள் செய்த நாடக விளம்பரம் எல்லாம், தபால் ஆபீசுக்குப் போய், பத்து மைலுக்குள் உள்ள ஊர்களுக்கெல்லாம், “இன்றிரவு சுகுண விலாச சபையார் ‘லீலாவதி-சுலோசனா’ ஆடப் போகிறார்கள்” என்று அறிவித்த தேயாம்! ஆயினும், அன்றிரவு நாடக வருமானத் தொகை 1700 ரூபாய்க்குமேல்!

நான் சந்தேகித்தபடியே இவர்கள் போய்க் கண்டிராக்டரை உத்திரவு கேட்க அம்மனிதன், சபையார் நான்காவது ஆட்டம் ஆட முடியுமானால் அப்பணம் தனக்குச் சேரவேண்டுமேயொழிய, மற்று யாருக்கும் சேரக்கூடாது என்று ஆட்சேபித்தானாம். அதன் பேரில் இவர்கள் அவனோடு பேரம் செய்து அவனுக்கு முன்னூறு ரூபாய் கொடுப்பதாயும், மிகுதிப் பணம் யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்கும். தேகப்பயிற்சி சங்கத்திற்கும் சேர வேண்டும் என்று தீர்மானித்தார்களாம். பிறகு ஏதாவது கோர்ட்டு வியாஜ்யமாய் முடிந்தால் என்ன செய்வதென்று, கண்டிராக்டர் கைப்பட இந்நாடகம் நடக்கலாம் என்று எழுதிக் கொடுத்தாலொழிய நான் இருந்த வீட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று பிடிவாதாய் உட்கார்ந்தேன். அதன் பேரில் சாயங்காலம் ஆறு மணிக்கு அப்படிப்பட்ட கடிதம் கிடைக்கவே, அப்புறம்தான் நாடகக் கொட்டகைக்கு நான் புறப்பட்டேன். நான் ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போனால், அதற்குள்ளாகக் கொட்டகை முழுவதும் ஜனங்களால் நிரம்பியிருந்தது! கொட்டகையின் வெளியே சில கிராமங்களில் ஏதாவது உத்ஸவம் நடந்தால் நூற்றுக் கணக்கான கட்டை வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருக்குமே, அப்படியிருந்தது. நாடகக் கொட்டகைக்குள்ளே அதற்குமேல் நின்று பார்ப்பதற்காக அநேகம் பேர் ரூபாய் 5 விகிதம் கொடுத்ததாக அறிந்தேன். யாழ்ப்பாணத்துவாசிகள்