பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/486

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

471


தங்கி, பிறகு எல்லோருடனும் பட்டணம் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டபொழுது, எங்களுடைய யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்களெல்லாம் அங்கு வந்து எங்களைக் கௌரவப்படுத்தி அனுப்பினார்கள்.

அன்று சாயங்காலம் கொழும்பு வந்து சேர்ந்து, மிஸஸ் திருநாவுக்கரசு அம்மாள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களைத் தனது அதிதிகளாக வரவழைத்து, அந்த அம்மையார் என்னை அன்றிரவு முதலில் பார்த்த பொழுது, “மிஸ்டர் சம்பந்தத்தின் அருவத்தைப் பார்ப்பது போலிருந்தது, எனக்கு” என்று சொன்னார்கள். அவ்வளவு மெலிவடைந்து முகம் வெளுத்திருக்க வேண்டும் நான்! ஆயினும் தேக பலம் குன்றியிருந்தபோதிலும் மனத்தில் மாத்திரம் எடுத்த காரியத்தை எப்படியாவது ஈசன் கருணையினால் முடித்திட்டோமே என்னும் சந்துஷ்டி குடிகொண்டிருந்தது.

இந்தத் திருநாவுக்கரசு அம்மாள், மிஸ்டர் ராக்வுட் என்னும் பிரபல வைத்தியரின் மூத்த மகள். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று பாஷைகளிலும் மிகுந்த விற்பன்னமுடையவர்கள்; சாதாரணமாகவே கற்றறிந்த மாதர்களையுடைய இந்த இலங்கைத் தீபத்தில், இவர்கள் எல்லோராலும் மிகுந்த கல்வி செறிந்தவர்களாக மதிக்கப்பட்டவர்கள்; இவர்கள் இரண்டு நாள் தன் வீட்டில் என்னைத் தங்கச் செய்து, நோயாளியாகிய எனக்குச் செய்த உபசரணை என் மரண பர்யந்தம் மறக்கற்பாலதன்று. என் அன்னையைப் போல என்னை ஆதரித்த இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? என் மனமார்ந்த வந்தனத்தை இங்கு நான் எழுதி வைப்பது தவிர்த்து வேறொன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

இம்மாது சிரோமணி இம்முறை நான் இலங்கைக்கு வந்த பின் பரிசயமான பிறகு, நான் அப்போதைக்கப்போது அச்சிடும் புஸ்தகங்களையெல்லாம் தவறாது இவர்களுக்கு அனுப்புவது என் வழக்கம். அவற்றையெல்லாம் படித்து, அவைகளைப்பற்றி அப்போதைக்கப்போது இவர்கள் மதிப்புரை எழுதி எனக்கு அனுப்புவார்கள். எனக்கு