பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/488

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

473


சிறு பாகத்தை எடுத்து, ஹாஸ்ய ரூபமாக எழுதியதாம். சிறுத்தொண்டரின் கதை யாவருக்கும் தெரிந்ததே. ஒரு நாள் நானிருக்கும் ஆச்சாரப்பன் வீதியில் ஏதோ சிறுவர்களுடைய நாடக சபையொன்று, என்னைத் தங்கள் வருஷாந்தரக் கொண்டாட்டத்திற்கு அக்கிராசனம் வகிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டது. அப்பொழுது அப்பிள்ளைகள், இக் கதையை ஒருவாறு நடித்தனர்; கதை நன்றாயிருக்கிறதென என் மனத்தில் தோன்றியது; அதன் பேரில் மறுநாள் இதை நான் நாடக ரூபமாக எழுத ஆரம்பித்து, இதன் முக்கியமான இரண்டு காட்சிகளையும் இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். உடனே எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டம் வரவே, அதன் முதல் நாள் நான் முன்னே சொன்ன “கோனேரி அரசகுமாரன்” நாடகத்தை ஆடி, இந்தச் சிறுத்தொண்டர் சரித்திரத்தை ஸ்திரீகளுக்கென்று ஏற்படுத்திய தினம் ஆடினோம்.

இச்சிறுத்தொண்டர் நாடகமானது நான் எழுதிய பல நாடகங்களுள் மிகச் சிறியதாயினும், அதன்மீது எனக்கு மிகவும் பிரியம் உண்டு. இதுவே ஒரு சிறிய நாடகம். இதிலும், சிறுத்தொண்டர் இரண்டு காட்சிகளில்தான் வருகிறார். இருந்தும், பெரிய நாடகப் பாத்திரங்களாகிய அமலாதித்யன், மனோஹரன், ஸ்ரீதத்தன், சுந்தராதித்யன் முதலியவற்றை நடிப்பதைவிட, இச் சிறுத்தொண்டர் நாடகம் நடிப்பதில் எனக்குச் சந்தோஷமதிகமாயுண்டு. என்னிடத்தில் வேறெந்த நற்குணமில்லாவிட்டாலும் பக்தி என்பது மாத்திரம் கொஞ்சம் இருக்கிறதென எண்ணுகிறேன். ஆகவே பக்தி ரசமமைந்த இச்சிறு நாடகத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது போலும்.

மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகள் தினத்தன்று இதை முதன் முதல் நடித்தபொழுது, எங்கள் சபையின் சட்டங்களின் பிரகாரம், அங்கத்தினராயிருந்தபோதிலும், ஆண் மக்கள் இந்நாடகத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. ஐகோர்ட்டு ஜட்ஜ் ஹானர்பில் சதாசிவ ஐயர் மாத்திரம் எங்கள் உத்தரவைப் பெற்று, விக்டோரியா பப்ளிக் ஹாலில், அரங்கத்தின் மீதிருந்து பார்த்தார். நான் இந்தச் சிறுநாடகத்தை முடித்துத் திரும்பியவுடன், பக்கப்படுதாவிலிருந்து பார்த்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்து மிகவும் புகழ்ந்தார்! இதை