பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/490

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

475


‘சென்னப் பட்டணத்து’ பாஷன்போல் தரிக்காமல், தெற்கத்திய மாது சிரோமணிகள் தரிப்பது போல் தரிக்க வேண்டும்.

1914ஆம் வருஷம், சுகுண விலாச சபை மிகவும் விருத்தியடைந்த வருஷங்களிலொன்று. இவ் வருஷத்தில் எங்கள் சபை திருச்சிராப்பள்ளி, கும்பகோணம் என்னும் இரண்டு இடங்களுக்குப் போய் நாடகங்கள் ஆடியது. திருச்சிராப்பள்ளியில் 5 நாடகங்கள் தமிழில் ஆடினோம். இவ்விடத்தில் எங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் தற்காலம் அசிஸ்டென்ட் டிராபிக் இன்ஸ்பெக்டரா யிருக்கும் எப்.ஜி. நடேச ஐயர் செய்தார். ஆயினும் நாங்கள் ஆடிய நாடகங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகமில்லை. இவ்வூரில் ஒரு பக்கமாக இருந்த ரெயில்வே இன்ஸ்டிட்யூட் நாடக சபையில் நாங்கள் ஆடியது ஒரு வேளை ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் அது ஒரு முக்கியக் காரணமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவ்விடத்தில் நாங்கள் நடத்திய மூன்றாவது நாடகமாகிய காலவ ரிஷி நாடகத்தின் ஆரம்பத்தில் நேரிட்ட ஒரு சமாச்சாரம் இப்பொழுதும் நினைத்துக் கொண்டால் எனக்கு நகைப்பைத் தருகிறது. இரவு 9 மணிக்கோ 9½ மணிக்கோ நாங்கள் குறிப்பிட்டபடி நாடகத்தை ஆரம்பம் செய்தோம். டிராப் படுதா மேலே போனவுடன், ஹாலில் பார்க்க, சரியாகப் பன்னிரண்டு பெயர்தான் உட்கார்ந்திருந்தார்கள்!

இதை நான் கவனித்தவனன்று; நான் இந்திரன் வேடம் பூண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். என் அருகில் நின்று கொண்டிருந்த சித்திரசேனன் வேடம் பூண்ட எனது நண்பர் டாக்டர் டி. சீனிவாச ராகவாச்சாரி இதைக் கவனித்து, ஆடிக்கொண்டிருந்த அப்சர ஸ்திரீகளுடைய நடனத்திற்குத் தாளம் தட்டிக் கொண்டிருக்க வேண்டியவர், என் பக்கமாகத் திரும்பி, சபையோர் அறியாதபடி “என்ன வாத்தியார்! ஹாலில் வந்திருப்பவர்களைவிட, மேடையின்மீது நாம் அதிகப் பெயர்கள் இருக்கிறோமே!” என்று சொல்லி நகைத்துவிட்டார்! அவர் கூறியதென்னமோ வாஸ்தவம்தான். ஏனெனில், இந்திரன் கொலுவில் திக்பாலர்கள், ரிஷிகள் முதலியோரை யெல்லாம் கணக்கிட்டால் நாங்கள் 15 பெயர் இருந்தோம். “ஸ்! நமக்கென்ன இதனால்? நம்முடைய கடமை நாடகத்தை நன்றாய் நடத்தவேண்டியது. ஹாலில்