பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/491

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

நாடக மேடை நினைவுகள்


ஜனங்கள் வந்திருக்கிறார்களா இல்லையா என்று நாம் கவனிக்கக்கூடாது” என்று கோபித்து மொழிந்ததை, இன்றும் எப்பொழுதாவது நாங்கள் வேடிக்கையாகச் சாப்பிட்டு விட்டுக் காலங்கழிக்கும் சமயங்களில், என்னைப் போல முகத்தைச் சுளித்து, அவ்வார்த்தைகளைக் கூறிக் காட்டுவார்.

கடைசி இரண்டு நாடகங்களுக்கும் ‘காலவரிஷி’யைவிட ஜனங்கள் அதிகமாக வந்தனர். இருந்தும் திருச்சிராப்பள்ளி வரையில், வரவு செலவுக் கணக்குப் பார்த்த பொழுது, சபைக்குக் கொஞ்சம் நஷ்டத்திலேயேயிருந்தது. ஆகவே, இவ்விடத்தைவிட்டு கும்பகோணத்திற்குப் புறப்பட்ட பொழுது, திருச்சிராப்பள்ளியிலே இப்படியிருந்ததே, இதைவிடச் சின்ன ஊராகிய கும்பகோணத்தில் எப்படியிருக்கப் போகிறது என்னும் மனவருத்தத்துடன்தான் புறப்பட்டோம்.

போஜனத்துக்குமேல் மத்தியான ரெயிலில் புறப்பட்டு சாயங்காலம் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். ஸ்டேஷனி லிருந்து எங்கள் விடுதிக்குப் போகும் வழியில், நாடகக் கொட்டகை வாயிலில் அச்சமயம் கும்பகோணம் சப் ஜட்ஜாயிருந்த எனது பழைய நண்பர் பாலசுப்பிரமணிய ஐயரைக் கண்டோம்; அவர் அச்சமயம், நாங்கள் முன்னதாகவே திருச்சிராப்பள்ளியிலிருந்து இவ்விடம் அனுப்பிய படுதாக்கள் முதலியவற்றை ஆட்கள் இறக்குவதை மேல்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் புன்சிரிப்புடன் எங்களுக்கெல்லாம் நல்வரவு கூறியதை நான் ஒரு நற்சகுனமாகக் கொண்டேன். இந்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் மயிலாப்பூரில் எங்கள் சபை “விரும்பிய விதமே” என்னும் நாடகம் போட்டது முதல் எனக்கு அத்யந்த நண்பராயிருந்தவர். எங்கள் சபையின் பாக்கியத்தால் இச்சமயம் இவர் இவ்விடம் சப் ஜட்ஜாயிருக்கும்படி நேர்ந்தது. இவர் நாங்கள் கும்பகோணத்திற்கு வந்தது முதல் அதைவிட்டுப் பட்டணம் புறப்பட்ட வரையில், கோர்ட் வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழித்தார் என்று கூறுவது மிகையாகாது.

ஊரில் பெரிய உத்தியோகஸ்தராகிய இவர் எங்கள் சபை விஷயமாக இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவே, ஊரிலுள்ள மற்றவர்களெல்லாம் எங்கள் சபையை மிகவும்