பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/492

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப சம்பந்த முதலியார்

477


மதிக்க ஆரம்பித்தனர். இதன் பலன் என்னவென்றால், இவ்விடம் எங்கள் முதல் நாடகமாகிய “மனோஹரன்” ஆரம்பிப்பதற்கு ஒன்றரை மணி சாவகாசத்திற்கு முன்பாக, கொட்டகையில் நாங்கள் விற்பதற்காக அச்சிட்டிருந்த டிக்கட்டுகளெல்லாம் ஆய்விட்டன! அதன் பேரில் எங்கள் சபை காரியதரிசியாக இருந்த எனது தமயனார் ஆறுமுக முதலியார், டிக்கட்டுகளில்லாமல், கையில் ரூபாயை வாங்கிக் கொண்டு கொட்டகையில் காலி இடங்களில் எத்தனை பெயரை நிற்கவிட முடியுமோ, அத்தனை பெயரை உள்ளே விட்டார்! கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதுகூட முடியாமல், கொட்டகை நிரம்பிவிட்டபடியால் அதையும் நிறுத்த வேண்டி வந்தது. இதை யெல்லாம் அறிந்த எங்களுக்குத் திருச்சிராப்பள்ளியில் பட்ட வருத்தமெல்லாம் பறந்து போய் அதிக சந்தோஷம் உண்டாச்சுது. இவ்வாறு குதூஹலத்துடனிருந்த நாங்கள், மிகவும் நன்றாய் நடித்தோம் என்று நான் கூறவே வேண்டியதில்லை. ஆயினும் ஒரு சமாச்சாரம், மேற்சொன்னபடி கொட்டகையில் நிற்க இடமில்லாமல் ஜனங்கள் நிறைந்திருந்த போதிலும், நாங்கள் எல்லாம் மிகவும் நன்றாய் நடித்த போதிலும், நாடக ஆரம்ப முதல் கடைசி வரையில் ஒரு கரகோஷமாவது என் செவியிற்படவில்லை! இதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்த நான், நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களுடன் அருகாமையிலிருந்த எங்கள் விடுதிக்குத் திரும்பிப் போகும் பொழுது, எங்கள் பந்தோபஸ்துக்காக நான்கு கான்ஸ்டபிள்களோடு எங்களோடு வந்த டெபுடி சூபரின்டென்டென்ட் ஆப் போலீஸ் அவர்களை, நாடகக் கொட்டகை முழுதும் நிரம்பியிருந்த ஜனங்களெல்லாம் சும்மாயிருந்தார்களே, என்ன காரணம் என்று மெல்லக் கேட்க, அவர் “யாருக்காக சும்மா இருந்தார்கள்? எவனாவது கைதட்டிக் கேலி செய்திருந்தால், உடனே அப்படியே அவனை ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போய் விடும்படி, அங்கங்கே கான்ஸ்டபிள்களை நிறுத்திவைத்தேன்!” என்று பதில் உரைத்தார். அப்பொழுதுதான் எனக்குக் காரணம் வெளியாயது. இவ்வூர் வழக்கம் என்ன வென்றால், நாடகத்தில் ஏதாவது நன்றாகயில்லாவிட்டால் கைதட்டிக் கேலி செய்வதாம்! கரகோஷம் செய்வது, நன்றாயிருக்கிறதென உற்சாகப்படுத்துவது என்பதை