பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/495

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

நாடக மேடை நினைவுகள்


“டிக்கட்டுகளெல்லாம் விற்றாயது; இனி மேளம் வாசித்துக் கொண்டிருந்தால் வந்து கேட்பவர்களுக்கு யார் பதில் சொல்வது? அதற்காக மேளத்தை நிறுத்திவிட்டேன்” என்று விடை பகர்ந்தனர்.

இந்த சந்தோஷ சமாச்சாரத்தைக் கேள்விப்பட்ட என்னாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அன்றைத்தினம் நடித்தது போல் ‘சித்ராங்கி’யாக, முன்னும் நடித்ததில்லை; பிறகும் நடிக்கவில்லை. ‘ராத்திரியெல்லாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறதே’ என்று வந்திருந்த ஒரு மாது சிரோமணி கூறினார்களாம். எனது நண்பர் பாலசுப்பிரமணிய ஐயர் நாடகம் முடிந்தவுடன், உள்ளே வந்து ‘என்ன முதலியார், நாடகமெல்லாம் முடிந்துவிட்டதே!’ என்று முகவாட்டத்துடன் கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்களெல்லாம் எங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்தனர். அதில் எங்கள் சபைக்குப் பரிசாக சித்திர வேலை செய்யப்பட்ட ஒரு ஷீல்ட் கொடுத்தார்கள். இதை இன்றும் சபையின் தமிழ் ஒத்திகை அறையில் காணலாம். இத்தனைக் குதூஹலத்துடன் எங்கள் சபையை ஆதரித்த கும்பகோணவாசிகளுக்கு, நாங்கள் மறுநாள் பிரதி விருந்து கொடுத்தோம். அப்போது ‘சபாபதி’ நாடகத்தை ஆடினோம். அது ஆடி முடிவதற்குள் நேரமாகி விட்டபடியால், நாங்கள் புறப்பட எண்ணியிருந்த ரெயில் போய்விட்டது. அதன்பேரில் இவ்வூரில் இன்னொரு நாள் தங்கி வரவேண்டியதாயிற்று. இதற்காக நாங்கள் ஒருவரும் துக்கப்படவில்லை. காலஞ்சென்ற பாலகிருஷ்ண உடையார் தன் விடுதியில் எங்களுக்கு அன்றைத்தினம் விருந்து அளித்தார். அன்று சாயங்காலம் எங்கள் நண்பர்களிடமெல்லாமிருந்து விடைபெற்றுக் கொண்டு ரெயிலேறிப் பட்டணம் போகப் புறப்பட்டோம். பாலசுப்பிரமணிய ஐயர், கடைசி வரையில் எங்களுடனிருந்து ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைப் பிரயாணப்படுத்தினார். இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவி என்றும் மறக்கற்பாலதன்று! மற்றவர்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது.

கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, ஒரு தேசத்தின் மீது படையெடுத்து, வென்று திரும்பும்