பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/498

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

483


ஜனங்களின் வீர உற்சாகத்தை அபிவிருத்தி செய்ய, இந்நாடகமானது இந்தியா தேச முழுவதும் ஆங்காங்கு ஆடவேண்டுமென்று எழுதினார்கள். இந்நாடகத்தில் ஒரு காட்சி, முக்கியமாக மிகவும் ரசமாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தனர்; அது ரஜபுத்ர வீரர்களுடைய பத்தினிகளெல்லாம் மஞ்சள் வஸ்திரம் தரித்து, அக்னியை வலம் வந்து அதில் பாய்ந்து மரித்த ‘ஜோஹர்’ என்னும் சடங்குக் காட்சியேயாம். ராணாவின் மனைவி, சிதையை மூட்டக் கடைசியில் கற்பூரத் தட்டையேந்தி முன்பு செல்ல, பிறகு எல்லா ரஜபுத்ர ஸ்திரீகளும் வர, அவர்கள் பின்னால், சிறுமிகளும், குழந்தைகளும் மஞ்சள் வஸ்திரமணிந்து சென்றனர். இந்தக் காட்சியை மத்யானம் நான் ஒத்திகை செய்த பொழுது, நான் எழுதிய பொழுது தோன்றாத ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. அதன்படி அக்குழந்தைகள் இரண்டின் கையில், அவர்கள் அருமையாய் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மரப்பொம்மைகளை, அவைகளுக்கும் மஞ்சள் வஸ்திரம் தரித்து, தீயில் மூழ்கக் கொண்டு போகச் செய்தேன். நாடகமானது அன்று சாயங்காலம் நடிக்கப்பட்டபொழுது, இவ்வாறு சிறு குழந்தைகள் தங்கள் பொம்மைகளையும் கையிலேந்தித் தீப் புக அரங்கத்தைக் கடந்து சென்றதைக் கண்டபொழுது, தன் அருமைக் குழந்தை அதன் பொம்மையையும் கையிற் கொண்டு தீப் புகப் போனதைக் கண்ட தகப்பன் மனம் எவ்வாறு பதறியிருக்கும் என்று நினைத்தேன்; உடனே என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் ஆறாகப் பெருகியது! நாடகத்தில் ஏதோ நான் நடித்ததாக இதை வந்தவர்கள் எண்ணினர். இதை நான் இங்கு எடுத்து எழுதியதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தக் காட்சியை ஆக்டு செய்யும் ஆக்டர்களும் அல்லது இம்மாதிரியான சோககரமான காட்சிகளை நடிக்கும் ஆக்டர்களும், நடிக்க வேண்டிய கதையின் சந்தர்ப்பத்தை மனத்தில் நன்றாய்க் கொள்வார்களானால், கண்ணீர் அவர்களுக்குத் தானாகப் பெருகும்; அழ வேண்டிய சந்தர்ப்பங்களில், கண்ணுக்குக் கற்பூரத்தூள் முதலியன போட்டுக் கொள்ள வேண்டிய தில்லை; அல்லது இன்னும் சில ஆக்டர்கள் செய்கிறபடி, ஸ்பிரிட் கம் தடவிக்கொள்ள வேண்டியதில்லை!